ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் போலீஸ் பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கடந்த வாரம் காணொலி மூலம் உரையாற்றினார்.  சட்டம் ஒழுங்கு, காவலர்களின் பணி, நாட்டின் பாதுகாப்பு, காவலர்களின் மனநிலை போன்ற பல்வேறு விஷயங்களை காவலர்களிடம் கலந்து ஆலோசித்தார் பிரதமர். காவலர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், அவர்கள் காவல் பதவியை தேடி வந்த கதை குறித்தும் கேட்டறிந்தார். அதில் ஒருவரான நவ்ஜோத் சிமியின் கதையை பிரதமர் மோடி கலகலப்பாக கேட்டறிந்தார். 




பிரதமர் மோடியின் கேள்வியால் காவலர்கள் சிரிப்பில் ஆழ்ந்தனர். பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் நவ்ஜோத் சிமி. இவர் பல் மருத்துவர். பின்னர் காவல்துறை மீது ஆர்வம் ஏற்பட்டு இப்போது ஐபிஎஸ் அதிகாரியாக மாறியுள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி கலந்துரையாடிய ஐபிஎஸ் அதிகாரிகளில் நவ்ஜோத்தும் ஒருவர். தான் ஒரு பல் டாக்டர் என்றும், இப்போது போலீஸ் அதிகாரி என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்ட பிரதமர் மோடி, அவரை வெகுவாக பாராட்டினார். பின்னர் பல் வலிக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு இருந்த நீங்கள் இப்போது எதிர்களின் பற்களை உடைக்கும் வேலையை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார். அவரது கலகலப்பான கேள்வியால் அங்கிருந்தவர்கள் சிரிப்பில் ஆழ்ந்தனர்.




கேள்வியைக் கேட்டவுடன் புன்சிரிப்புடன் பதில் சொன்ன சிமி, மக்களின் வலியை போக்கும் பணி காவல்துறை பணி. எனவே அதனை தேர்வு செய்தேன் என பதிலளித்தார். மேலும்,  மருத்துவரின் பணி மக்களின் வலியை போக்குவது. காவலரின் கடமை மக்களின் வலியை போக்குவது. சேவையாக பணியாற்ற போலீஸ் என்பது பெரிய தளம் என நினைத்தேன் என்றும் அசரடித்தார் சிமி. 


முன்னதாக அந்த கலந்துரையாடலில் பேசிய பிரதமர் மோடி, விடுதலை போராட்டத்தின் போது நாட்டுகாக இந்தியர்கள் உயிர்த்தியாகம் செய்ய தயாராக இருந்தனர். அதற்கும் ஒரு படி மேலேபோய் நாட்டுக்காகவே அதிகாரிகள் வாழவேண்டும் என்றார். மேலும் , பல அதிகாரிகள் சட்டம் ஒழுங்கிற்காக உயிர்த்தியாகம் செய்கின்றனர். ஆனாலும் பொதுமக்களின் நம்பிக்கை போலீசார் மீது அதிகரிக்கவில்லையே, ஏன்? காவலர்களின் கொள்கைகளும் நோக்கமும் அவர்களின் நடத்தையில் தெரிய வேண்டும். நாட்டு நலவே முதலாவது கடமை. மக்களின் நண்பனாக போலீசார் இருக்கவேண்டும்.  போலீசார் உடலினை உறுதியாக வைத்திருக்க வேண்டும். அது மற்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றார்.






Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற