இந்தியாவின் இசைக்குயில்  என கொண்டாடப்படும்   மறைந்த பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு , அவரது நினைவாக பிரதமர் நரேந்திர மோடி   பிரம்மாண்ட வீணை ஒன்றினை திறந்து வைத்தார். 



பன்மொழி பாடகியான லதா மங்கேஷ்கர் , கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இசை பயணத்தை பறைசாற்றும் வகையில் , உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில்  14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.மேலும் லதா மங்கேஷ்கரின் நினைவாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்திரவின் பேரில் , சாலை கட்டுமான பணிகள் நடைப்பெற்று வந்தன. இந்த நிலையில் அந்த பகுதியின் முக்கிய சாலைக்கு மறைந்த இசை அரசி லதா மங்கேஷ்கரின் பெயர் சூட்டப்படும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த விழாவில் மத்திய கலாசார  அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் ஜெய்வீர் சிங், லதா மங்கேஷ்கரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்வார்கள் என தெரிகிறது. 







இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “சகோதரி லாதா அவர்களின் பிறந்தநாளை நினைவுகூர்கிறேன். நான் நினைவுகூருவதற்கு நிறைய இருக்கிறது... எண்ணிலடங்கா தருணங்களில் அவர் மிகுந்த அன்பைப் பொழிந்தார். இன்று அயோத்தியில் உள்ள ஒரு சாலைக்கு அவர் பெயர் சூட்டப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்தியாவின் மிகப்பெரிய சின்னமாக விளங்கிய ஒருவருக்கு  செலுத்தும் பொருத்தமான அஞ்சலில் இதுவாக இருக்கும் என நான் நம்புகிறேன் ” என்றார்.







இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். மராத்தியை பூர்வீகமாக கொண்ட லதா மங்கேஷ்கரின் குரலில் சில தமிழ் பாடல்களே வந்திருந்தாலும் மொழிகளை தாண்டிய அவரது குரலுக்கும் , இசை ஞானத்திற்கும் மயங்காதவர்களே இருக்க முடியாது.மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பிப்ரவரி 6 ஆம் தேதி காலமானார்.  92 வயதான பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.