`பருவநிலை மாற்றத்திற்கு முன்னேறிய நாடுகளே காரணம்!’ - ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை டெல்லியில் நடைபெறும் ஜக்கி வாசுதேவின் `மண்ணைக் காப்போம்’ இயக்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Continues below advertisement

இன்று ஜூன் 5 உலகம் முழுவதும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை டெல்லியில் நடைபெறும் `மண்ணைக் காப்போம்’ இயக்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என அவரது அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Continues below advertisement

`மண்ணைக் காப்போம்’ என்ற சர்வதேச இயக்கம் மூலமாக மண்ணின் சுகாதாரம் அழிந்து வருவதையும், அதனைக் காப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த இயக்கத்தைக் கடந்த மார்ச் மாதம் இந்து மதச் சாமியாரான சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் சுமார் 27 நாடுகள் வழியாக 100 நாள்கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஜக்கி வாசுதேவ். மேலும் ஜூன் 5 அன்று, இந்தப் பயணத்தின் 75வது நாள் என்பதையும் அவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலமாக பிரதமர் மோடி இந்தியாவின் மண்ணின் நலனை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் இந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் மண்ணை செயற்கை ரசாயனம் இன்றி மாற்றுவது, மண்ணில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது, மண்ணின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் விதமாக நீர் கிடைப்பதை உறுதி செய்வது, நிலத்தடி நீர்த் தட்டுப்பாடு காரணமாக ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பது, காட்டில் மண் அரிப்பு ஏற்படுவதால் நிலச்சரிவு நிகழாமல் தடுப்பது முதலானவற்றைப் பேசியுள்ளார். 

இந்த முயற்சிகளில் இந்தியாவின் பங்கு குறித்து பேசிய பிரதமர் மோடி, `பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் பங்கு மிகச் சிறியதாக இருந்த போதும், இந்தியா சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நவீன உலகின் பெரிய நாடுகள் உலகின் வளங்களை அதிகமாக சுரண்டிப் பயன்படுத்துவதோடு, கார்பன் உற்பத்தியில் பெரிய பங்கு இந்த நாடுகளுடையது’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், தனது ஆட்சியில் சூழலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு திட்டங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு முதலானவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement