கொரோனா பெருந்தொற்றில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாரூக் கான் மற்றும் கேத்ரீனா கைஃப். இவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஷரூக் கானின் ஜவான் திரைப்படத்தினைப் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் அவருக்கு பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடப்பட்டது.


கொரோனா


2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவெடுத்த கொரோனா பெருந்தொற்று 2020 மற்றும் 2021ம் ஆண்டினை, முதல் அலை இரண்டாவது அலை என முழுமையாக விழுங்கிவிட்டது. உலகம் முழுவதையும் தன் கட்டுக்குள் வைத்திருந்த சிறிய வைரஸ், பணக்காரன், ஏழை, அதிகாரத்தின் உச்சானிக் கொம்பில் இருப்பவர்கள், அதிகாரமற்ற எளிய மக்கள் என அனைவருக்கும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இரண்டு அடுக்கு மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்பில் இருந்த அனைவரையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. உலகையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பிக்க வைத்த கொரோனா பெருந்தொற்று இந்த ஆண்டில் தான் ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என முன்களப் பணியாளர்கள் உட்பட பலரும் உயிரிழந்தனர்.  ஊரடங்கு, தடுப்பூசி என ஓரளவு கட்டுக்குள் வந்திருந்தாலும்,  இன்றைக்கும் அதன் பரவலும் அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையையும் பார்க்க முடிகிறது.


 


மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்படியான பெருந்தொற்று பரவல் சூழலில் பெரும் பெரும் அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை மிகவும் இயல்பாக தங்களின் பணிகளைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலும் யாரும் முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்பதை நாம் கண்கூடப் பார்க்க முடிகிறது.


படக்குழுவினர் அதிர்ச்சி


தற்போது கொரோனா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ஷாரூக் கான் பெருந்தொற்றினை கட்டுக்குள் கொண்டுவர போடப்பட்ட முதல் ஊரடங்கின் போது  ஊரடங்கினை மிக கவனமாக கடை பிடிக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் எனப் பேசி வீடியோவினை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.  பாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமானவர்களான ஷாரூக் கான் மற்றும் கேத்ரீன கைஃப் ஆகியோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் பயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஷரூக்கின் ஜவன் திரைப்படத்தினைப் பற்றிய அறிவிப்பு வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு படக்குழுவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.