Kashi Vishwanath Corridor Inauguration: வாரணாசிக்கு இரண்டு நாட்கள் பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, காசியில் உள்ள கங்கையில் புனித நீராடி வழிபாடு செய்தார்.  மேலும், ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். 






 


விஸ்வநாதர் ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதையை பக்தர்கள் எளிதில் அணுகும் வகையில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற 2019 மார்ச் 8-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. 


திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு  யாத்ரி சுவிதா மையங்கள், சுற்றுலா வசதி மையம், வேத மையம்,முமுக்க்ஷூ பவன், போக்சாலா, நகர அருங்காட்சியகம், பார்வையாளர் மாடம், உணவு விடுதிகள் உள்பட  பல,வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


 






 


இன்று, மாலை 6 மணிக்கு ரோ-ரோ படகில் பயணிக்கும் அவர், கங்கை ஆரத்தியை பார்வையிடுவார். நாளை மாலை, வாரணாசியில் சர்வேத மகாமந்திரில், சத்குரு சதாபல்தியோ விஹாங்கம் யோக் சன்ஸ்தான் 98-வது ஆண்டு கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இரண்டு நாள் பயணத்தின் போது, அசாம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர்கள், பீகார், நாகாலாந்து மாநிலங்களின் துணை முதலமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார். ஒரே இந்தியா என்னும் பிரதமரின் கண்ணோட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் அரசு சார்ந்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த மாநாடு அமையும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.