2001, டிசம்பர் 13, காலை 11.30 மணியளவில் அனுமதியின்றி யாரும் எளிதில் நுழைய முடியாத இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றார்கள். நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சில எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக வைப்பது அவர்களின் திட்டம். அதை பாதுகாப்புப் படையினர் முறியடித்தார்கள். நடந்த சம்பவத்தில் எட்டு பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் ஒன்பது பேரும், 5 ஆயுததாரிகளும் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது. துயரமும், துணிச்சலும், விவேகமும் நிறைந்த இந்த சம்பவத்தின் 18-ஆவது நினைவுதினம் இன்று (13.12.2021) அனுசரிக்கப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாத அமைப்புகளின் ஐந்து பயங்கரவாதிகள் உள்துறை அமைச்சகம் மற்றும் பாராளுமன்றத்தின் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட அம்பாசிடர் காரில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஊடுருவினர்.






ஏகே 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை ஏந்தியபடி, நாடாளுமன்ற (Parliament) வளாகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வளையங்களில் அத்துமீறி  நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பயங்கரமான சம்பவத்தில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளும் முக்கிய கட்டிடத்துக்கு செல்லும் முன்னரே பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் தேசிய தலைநகரில் உள்ள பிற கடுமையான குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும், விசாரிக்கவும் 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தில்லி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் சிறப்புப் பிரிவு இந்த விசாரணைக்கு பொறுப்பேற்றது. 






வெறும் 72 மணி நேரத்தில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த வழக்கின் பல முக்கிய விஷயங்களை கண்டுபிடித்தது. இது தொடர்பாக முகமது அப்சல் குரு, சவுகத் ஹுசைன், அப்சல் குரு மற்றும் எஸ்ஏஆர் கிலானி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அப்சல் குரு டெல்லியின் திகார் சிறையில் பிப்ரவரி 2013 இல் தூக்கிலிடப்பட்டார். சவுகத் ஹுசைன் சிறையில் தண்டனை அனுபவித்தார். இந்த தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் தொண்டும் தியாகமும் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.