பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் அமல்படுத்தப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவுபெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் உள்கட்டமைப்பில் புரட்சிகரமாக்கும் நோக்கத்துடன் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக பிரதமர் கதிசக்தி தேசியப் பெருந்திட்டம் உருவாக்கப்பட்டது.


இது பன்முக இணைப்பைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது. துறைகளில் விரைவான, திறமையான வளர்ச்சியை இயக்குகிறது. பல்வேறு  பங்குதாரர்களின் தடையற்ற ஒருங்கிணைப்பு சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும், தாமதங்களைக் குறைக்கவும், பலருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுத்தது.


 






வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற இந்தியா வேகத்தை அதிகரித்து வருவதற்காக கதிசக்திக்கு நன்றி. இந்த திட்டம் முன்னேற்றம், தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.


தடையற்ற இணைப்பை உறுதி செய்யும் திட்டம்:


75ஆவது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றியபோது 'பிஎம்  விரைவு சக்தி' திட்டத்தை அறிவித்தார். 


இந்த டிஜிட்டல் தளம் ரயில்வே, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு போக்குவரத்து முறைகளில் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற, திறமையான இணைப்பை வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதன் மூலம் தொலைதூர இணைப்பை மேம்படுத்துகிறது; பயண நேரத்தைக் குறைக்கிறது. பாரத்மாலா, சாகர்மாலா, உள்நாட்டு நீர்வழிப்பாதைகள், சரக்குகள் ஏற்றும் நில துறைமுகங்கள், உடான் போன்ற பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களை பிஎம்  விரைவு சக்தி ஒருங்கிணைக்கிறது.


பிஎம் விரைவு சக்தியை மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்த மாவட்டப் பெருந்திட்ட போர்ட்டல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் போர்ட்டல் மாவட்ட அதிகாரிகளுக்கு கூட்டாகத் திட்டமிடல், உள்கட்டமைப்பு இடைவெளியை அடையாளம் காணுதல், திட்ட அமலாக்கம் ஆகியவற்றில் உதவும்.