பிரதமர் மோடி சென்னை வருகையொட்டி ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஜுலை 28, 29 ம் தேதிகளில் சென்னையில் ட்ரோன், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மற்றும் தமிழகத்திற்கு ஜூலை 28 (வியாழக்கிழமை) இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளும் முதல் நாளில், குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் சபர் பால் பண்ணையின் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
"இந்த திட்டங்கள் உள்ளூர் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இது இப்பகுதியில் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்" என்று பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் சென்னை செல்லும் அவர் அங்கு ஜேஎல்என் உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்த ஆண்டு ஜூன் 19 அன்று புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய மைதானத்தில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த ஜோதி 40 நாட்களுக்கும் மேலாக நாட்டின் 75 முக்கிய இடங்களுக்குச் சென்று, 20,000 கிலோமீட்டர் வரை பயணித்து, சுவிட்சர்லாந்தில் உள்ள FIDE தலைமையகத்திற்குச் செல்வதற்கு முன்பு மகாபலிபுரத்திற்கு நாளை வந்தடையும்.
44வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் இந்த தொடர் முதன்முறையாக இந்தியாவிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியாவிலும் நடத்தப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதற்கான இறுதி கட்ட பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. அத்துடன் இதில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளை வரவேற்று அவர்கள் வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூலை 29ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியின் போது மோடி 69 சாதனையாளர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றுவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்