ஜி20 அமைப்புக்கான இலச்சினை, கருத்துரு மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்தியாவின் மந்திரம் என்று பிரதமர் தெரிவித்தார்.
பொதுவாக ஜி-20 தலைவர் பதவி என்பது எந்த நாட்டில் ஜி20 மாநாடு நடைபெறுகிறதோ அந்த நாட்டுக்கு ஜி20 Presidency பதவி தற்காலிகமாக அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில வருகிற டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை இந்தியாவுக்கு ஜி 20 தலைமைப் பதவி கிடைக்க இருக்கிறது. அதாவது இந்தியாவில் ஜி-20 மாநாடுகள் பல முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜி20 தலைமைக்கான இலச்சினை, கருத்துரு மற்றும் இணையதளத்தை வெளியிட்டார். ஜி 20 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, கனடா, பிரேசில், பிரான்ஸ், சீனா, இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, கொரியா குடியரசு, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இது தொடர்பாக அரசு செய்திக் குறிப்பில், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உலக அரங்கில் தலைமை வகிக்கும் வகையில் உருவாகி வருகிறது. இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, இந்தியா டிசம்பர் 1, 2022 முதல் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளவில் பங்களிக்க ஜி20 தலைமைத்துவம் இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. நமது ஜி20 தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள், இணையதளம் ஆகியவை இந்தியாவின் செய்தி மற்றும் அதிக முன்னுரிமைகளை உலகளவில் பிரதிபலிக்கும்.
ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். ஜி20 தலைமையின் போது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இலச்சினை இந்திய தேசியக் கொடியின் 4 நிறங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பூமி தாமரை மீது அமர்ந்திருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 7 இதழ்களும் உலகின் 7 கண்டங்களும் ஜி20 மாநாட்டில் ஒன்றிணைவதை குறிக்கிறது. இதில் உள்ள பூமி, இந்தியாவின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலச்சினையை அறிமுகம் செய்துவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜி20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும் இவ்வேளையில் நான் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகமே ஒரு குடும்பம் என்பது உலகிற்கான இந்தியாவின் பிரத்யேகமான சிந்தனை.
இந்தியா தலைமையேற்கும் இந்தத் தருணத்தில் உலகம் மிகப்பெரிய சிக்கல்களை, சறுக்கல்களை எதிர்கொண்டுள்ளது. பெருந்தொற்று, போர், பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்றன. இந்தச் சூழலில் ஜி20 மாநாட்டில் தாமரை இலச்சினை நம்பிக்கைக்கான குறியீடு. புறச்சூழ்நிலை எவ்வாறாக இருந்தாலும் தாமரை மலந்துவிடும். அந்த நம்பிக்கையை விதைக்கவே தாமரையை இலச்சினையில் இணைத்துள்ளோம். இந்தியக் கலாச்சாரத்தில் அறிவு தெய்வம் சரஸ்வதி தாமரையில் வீற்றிருப்பார். அந்த அறிவும் ஞானமும் தான் இப்போது உலகிற்கு தேவை. ஞானத்தைப் பகிர்ந்து கொண்டால் உலகம் ஒட்டுமொத்தமும் அனைத்து கடினமான சூழ்நிலைகளையும் கடந்து உய்யும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு வளர்ச்சிக்கான பயணத்தை நாம் தொடங்கினோம். நாம் தற்போது அடைந்திருக்கும் இந்த உயரத்திற்கு கடந்த 75 ஆண்டுகளில் அமைந்த அனைத்து அரசுகளுக்கும் பங்கிருக்கிறது. ஏன் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு இருக்கிறது. அனைவரின் கடும் உழைப்பின் காரணமாகவே இந்த உயரத்தை நாம் எட்டுவது சாத்தியமாகி இருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்கும் நோக்கில் ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு மின் உற்பத்தியகம் என்ற அடிப்படையில் உலகை இந்தியா வழிநடத்தி வருகிறது. ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே இந்தியாவின் மந்திரம். ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்க இருக்கும் இந்தியா காட்டும் இந்த பாதை, உலக நலனுக்கு வழிவகுக்கும்” என்று பேசினார்.