வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி, உலகை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அந்த வகையில், இன்றைய நவீன உலகில் மிக மிக்கிய தொழில்நுட்பமாக கருதப்படும் இணையம் பல்வேறு வகைகளில் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது.


கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் மொத்தம் ₹ 1.50 லட்சம் கோடிக்கு ஏலம் விட்டது டெலிகாம் துறை.


பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணத்தை வெளியிட்ட பிரதமர்:


இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார்.


அதேபோல, 6ஜி சேவைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனை தளத்தையும்  (6G Test bed) இன்று திறந்து வைத்துள்ளார். இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பத்தை வேகமாக ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த ஆவணம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. 


பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணம் என்றால் என்ன?


பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு குழுவால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இந்தியாவில் 6Gக்கான திட்ட வரைபடம் மற்றும் செயல் திட்டங்களை தயாரிப்பதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 


பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் வல்லுநர்கள், கல்வித்துறை, தரநிலை அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.


6G Test bed என்றால் என்ன?


கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட்-அப்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை சோதித்து சரிபார்க்க தளம் வழங்க 6G டெஸ்ட் பெட் பயன்படுகிறது.


கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் பேசிய பிரதமர் மோடி, "இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 6ஜியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இளைஞர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுமையான தீர்வுகளைக் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.