பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டதையடுத்து, உக்ரைன் பயணம் மேற்கொண்டது மோடி அரசின் ராஜதந்திரம் இல்லை என்றும், அழுத்தத்தின் காரணமாக மேற்கொண்டார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அரசின் , அயல்நாட்டு கொள்கையின் போக்கு எப்படி இருக்கிறது என பார்ப்போம்.
ரஷ்யா- உக்ரைன் போர்:
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது, இரு நாடுகளை மட்டுமின்றி இதர நாடுகளையும் பாதித்துள்ளது. முக்கியமாக கச்சா எண்ணெய் உள்ளிட்டவைகளின் ஏற்றுமதியும் பாதிப்புக்கு உள்ளானதால் வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த தருணத்தில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியும் போரானது நின்றதாக தெரியவில்லை.
பிரதமர் மோடி பயணம்:
இந்த தருணத்தில் பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யா பயணம் மேற்கொண்டார். அங்கு சென்ற அவர். அதிபர் புதினை ஆரத் தழுவினார். அப்போது போரை நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் அமைதியாக பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. அப்போது, உக்ரைன் அதிபர் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் , உலகின் மோசமானவரை சந்தித்திருக்கிறார் என விமர்சனம் வைத்தார்.
மேலும், ரஷ்யாவின் மோடியின் பயணத்திற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பார்க்கப்பட்டது.
இதையடுத்து , சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி யுக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, யுக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை ஆரத்தழுவினார். மேலும், அவரிடமும் போரை நிறுத்த வேண்டும் எனவும் , பேச்சுவார்த்தையின் மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்கான முன்னெடுப்பை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு இந்தியா துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.
ராஜதந்திரம்
ரஷ்ய பயணத்தை தொடர்ந்து, உக்ரைன் பயணமானது, மோடியின் ராஜதந்திரம் எனவும், இரு நாடுகளையும் பகைத்து கொள்ளாமல் நடுநிலை போக்கை எடுத்துள்ளார் என்றும் சிலர் பாராட்டுகள் தெரிவித்தனர்.
மாலத்தீவு, நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் ஒரு கட்சி சார்பை மோடி அரசு எடுத்ததால் அந்த நாடுகளிடையேயான வெளியுறவுக் கொள்கை சிக்கலுக்கு உள்ளானது. ஆனால், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான முடிவில் பிரதமர் மோடி அரசு சரியான முடிவை எடுத்துள்ளது என்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர், உக்ரைன் பயணமானது வெளிநாடுகளின் அழுத்தத்தின் காரணமக சென்றதாகவும் கூறுவதையும் பார்க்க முடிகிறது.
இந்த தருணத்தில், இந்திய அரசு எடுத்த நடுநிலையான முடிவானது, பெரும்பாலும் நேர்மறையான முடிவாகவும் ராஜதந்திர முடிவாகவும் பார்க்கப்படுகிறது என்றே சொல்லலாம்.