உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி - 5 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாதுகாப்பை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் அக்னி - 5 ஏவுகணை:


புவிசார் அரசியலில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அண்டையில் இருக்கும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதோடு, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளில் சீனாவின் செல்வாக்கு பன்மடங்கு உயர்ந்துள்ளது.


எனவே, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாட்டின் ஆயுத அமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, அக்னி - 5 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு:


இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "மிஷன் திவ்யாஸ்ட்ரா மூலம் பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


இதில், MIRV தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஏவுகணை மூலம் பல வார்ஹெட்கள் விடுவிக்கப்பட்டு பலமுனைகளில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. தற்போது, மிஷன் திவ்யாஸ்ட்ராவை சாத்தியமாக்கி இருப்பதன் மூலம் MIRV தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 


 






உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஏவியோனிக்ஸ் அமைப்பும் துல்லிய சென்சார் தொகுப்புகளும் அக்னி - 5 ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். அக்னி - 5 ஏவுகணையின் திட்ட இயக்குநர் டெஸ்ஸி தாமஸ். இவரை தவிர இந்த திட்டத்தில் பல பெண் விஞ்ஞானிகள் பங்காற்றியுள்ளனர்.                                                        


இதையும் படிக்க: "400 இடங்களில் வென்றால் அரசியல் சாசனத்தையே மாத்திருவோம்" பா.ஜ.க. எம்.பி. பேச்சு - கொதித்தெழுந்த காங்கிரஸ்!