வரும் ஜனவரி 15 அன்று, பிரதமர் நரேந்திர மோடி விவசாயம், சுகாதாரம் முதலான பல்வேறு துறைகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் வீடியோ கான்பரசிங் மூலம் கலந்துரையாடவுள்ளார்.
வர்த்தகம், விண்வெளி, தொழில்துறை, பாதுகாப்பு, பொருளாதாரத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், விவசாயம், சுகாதாரம் முதலான துறைகளைச் சேர்ந்த 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள இருப்பதாகப் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வேலைத்தன்மைக்கு ஏற்றவாறு இந்தக் குழுக்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி முன்னிலையில் கொடுக்கப்பட்டுள்ள வேலைத்தன்மைக்கு ஏற்றவாறு கலந்துரையாடலின் போது இந்த நிறுவனங்கள் விளக்கம் அளிப்பர். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும், நாட்டின் தேவைகளுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் எப்படி பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்தக் கலந்துரையாடல் எனப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு, `புதுமையான தொழில் சூழலைக் கொண்டாடுதல்’ என்ற ஒரு வார நிகழ்ச்சியாக ஜனவரி 10 முதல் 16 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட ஆறாவது ஆண்டை இந்த நிகழ்ச்சி கொண்டாடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
`நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் அதிகளவில் பங்களிக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பவர் பிரதமர். 2016ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கியது இந்த சிந்தனையில் இருந்து உருவானது. ஸ்டார்ட் நிறுவனங்கள் வளர்வதற்கும், மேம்படுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக அரசு பணியாற்றி வருகிறது’ என இந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும், இது வளர்ச்சியைப் பெருக்கியுள்ளதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.