PM Modi Russia: ரஷ்யா பயணத்தின் போது பிரதமர் மோடி,  சீன அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பிரதமர் மோடி ரஷ்ய பயணம்:


பிரிக்ஸ் அமைப்பின் 16-வது மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவின் கசான் நகருக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். கடந்த ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் இந்த அமைப்பின் முதல் உச்சிமாநாடு இதுவாகும். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (2010 இல் சேர்க்கப்பட்டது) அடங்கிய பிரிக்ஸ் அமைப்பானது,  ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தற்போது விரிவடைந்துள்ளது.


புதின் உடன் சந்திப்பு:


ரஷ்யா சென்றதுமே பிரதமரின் முதல் நிகழ்ச்சியாக, அதிபர் புதினை சந்திப்பார் என கூறப்படுகிறது. இதில் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படலாம். 2030 ஆம் ஆண்டுக்குள் ரஷ்யாவுடன் 100 பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தகத்தை இந்தியா இலக்கு வைத்துள்ளது. இதனை நடைமுறைபடுத்துவது குறித்தும் மோடி மற்றும் புதின் விவாதிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உக்ரைன் போர் குறித்தும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


சீன அதிபருடன் பேச்சுவார்த்தை?


அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லாவிட்டாலும், உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருதரப்பு சந்திப்பை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருநாடுகளுக்கு இடையேயான எல்லைப்பிரச்னை நீடித்து வரும் சூழலில், இந்த நடைபெற்றால் அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்.


பிரதமர் மோடி ரஷ்யா பயணம் - முக்கிய நிகழ்ச்சி நிரல்:



  • கசானில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். முக்கிய விவாதங்கள் புதன்கிழமை நடைபெறும்.

  • BRICS ஒத்துழைப்புக்கான எதிர்காலப் பாதையை வடிவமைக்கும் கசான் பிரகடனத்தை தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தனது இரண்டு நாள் பயணத்தில் துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஈரானின் மசூத் பெசெஷ்கியன் உட்பட பல உலகத் தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

  • மேலும் சில பிரிக்ஸ் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம்:


BRICS மற்றும் உலகளாவிய தெற்கு: உலகத்தின் எதிர்காலத்தை ஒன்றாக உருவாக்குதல்" என்ற கருப்பொருளில் BRICS+ வடிவத்தில் இந்த உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் 24 நாடுகளின் தலைவர்கள், மொத்தம் 32 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இது ரஷ்யாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கை நிகழ்வாக இருக்கும் என அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. BRICS உறுப்பு நாடுகள் உலக மக்கள்தொகையில் 41 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 16 சதவீதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.