வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் கூட்டத்திற்கு அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதன் இன்று தலைமை தாங்கினார்.
டெல்லியில் முக்கிய மீட்டிங்:
கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில், உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தற்போதைய நிலை குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தலைமை இயக்குநர் குழுவினருக்கு விளக்கினார். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 22ஆம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23ஆம் தேதி காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும்.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24 காலையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையில் இருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையக்கூடும். தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகரும் இந்த புயல் 24ஆம் தேதி இரவு மற்றும் அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலையில் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர்கள் சூறாவளி புயலின் எதிர்பார்க்கப்படும் பாதையில் உள்ள மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குழுவிடம் விளக்கினர்.
தயார் நிலையில் NDRF:
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைகளும் முடுக்கிவிடப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றன.
போதுமான தங்குமிடங்கள், மின்சாரம், மருந்து மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மேற்கு வங்கத்தில் 14 அணிகளையும், ஒடிசாவில் 11 அணிகளையும் நிறுத்துவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாரதீப் மற்றும் ஹால்டியா துறைமுகங்களுக்கு வழக்கமான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பப்படுகின்றன. உடனடியாக சீரமைக்க மின்துறை அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மூலம் அவசர குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.