அமைச்சரவை கூட்டம்:


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில்,  அமைச்சரவை உறுப்பினர்களுடன் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்னும் இரண்டு தினங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள சூழலில், இந்த அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுஷ்மா ஸ்வராஜ் பவனில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. 


முக்கிய நோக்கம்:


அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் இதர காரணிகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அமைச்சரவை மாற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 உச்சி மாநாடு மற்றும் இந்தியாவின் தலைவர் பதவி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும்,  2022-2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


நாடாளுமன்ற தேர்தல் பணிகள்:


2024ம் ஆண்டு தேர்தலுக்காக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணிகளை தொடங்கியுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.


அமைச்சரவையில் மாற்றம்?


எதிர்க்கட்சிகள் மேம்போக்காக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், பாஜக மைக்ரோ அளவில் தீவிரம் காட்டி வருகிறது. மக்களை கவரும் விதமாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளோடு அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை சமாதானப்படுத்துவது, கட்சி சற்று பலவீனமாக  உள்ள மாநிலங்களை சேர்ந்த பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை கவரும் நடவடிக்கைகளையும் பாஜக செய்து வருகிறது. அந்த வரிசையில், விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.


எப்போது மாற்றம்? 


2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் அதற்கு முன் நடைபெற உள்ள 9 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று கூடும் மத்திய அமைச்சரவையில், ஒவ்வொருவரின் செயல்பாட்டை கருத்தில் கொண்டு அவர்கள் மதிப்பிடப்பட உள்ளதாகவும், அதனடிப்படையில் பிரதமர் மோடி அமைச்சரவையில் மாற்றம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


யாருக்கு வாய்ப்பு?


அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் போது, தொகுதிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற மற்றும் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.  4 முதல் 5 எம்.பிக்கள் புதியதாக அமைச்சர் ஆகலாம் எனவும், குஜராத் மற்றும் தெலங்கானாவை சேர்ந்த சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.