கடந்த 2014-ஆம் ஆண்டு பதவியேற்றத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமைகளிலும் இந்திய வானொலியின் வாயிலாக நாட்டுமக்களிடம் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பேசிவருகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில் 25.04.2021, ஏப்ரல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் காலை 11 மணியளவில் மக்களிடம் உரையாற்றவுள்ளார். நாட்டில் பெருந்தொற்றின் அளவு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் நிலையில், இன்று நடக்கவிருக்கும் 'மன் கி பாத்' நிகழ்வில் கொரோனா பரவல், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி விலையேற்றம் குறித்து மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக பரவிவருவது கவலையளிக்கும் விதமாக உள்ளது. ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695-இல் இருந்து ஒரு கோடியே 66 லட்சத்து 10 ஆயிரத்து 481-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு இரண்டாயிரத்து 624 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920-ல் இருந்து ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 544-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 838 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159-இல் இருந்து ஒரு கோடியே 38 லட்சத்து 67 ஆயிரத்து 997-ஆக உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 84.92 சதவீதம் மற்றும் உயிரிழப்பு விகிதம் 1.15 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25 லட்சத்து 52 ஆயிரத்து 940-ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 324 பேர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 13 கோடியே 83 லட்சத்து 79 ஆயிரத்து 832 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்றின் அளவை குறைக்க நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.