ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், பிரதமர் மோடி ராமர் பக்தியில் முழுமையாக மூழ்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்தார். இக்கோயிலில் வழிபடப்படும் முக்கிய தெய்வம் சிவனின் வடிவமான ராமநாதசுவாமியை வழிபடும் முன் பிரதமர் மோடி அக்னி திர்த்தக் கடலிலும் ராமேஸ்வர கோவில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினார். அதன் பின்னர் கோவிலினை வலம் வந்து வழிபாடு நடத்திய பிரதமர் மோடி கோவில் வளாகத்தில் நடைபெற்ற பஜனையில் கலந்து கொண்டு பஜனையை மெய்மறந்து ரசித்தார்.
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தந்ததால் ராமேஸ்வரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை பெங்களூரில் இருந்து சென்னை வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தது மட்டுமே அரசுமுறை நிகழ்வாக இருந்தது. அதன் பின்னர் அவர் ஸ்ரீ ரங்கம் சென்றது, ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளதும் முழுக்க முழுக்க ஆன்மீகப்பயணமாக அமைந்துள்ளது.
இன்று மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்கியுள்ளார்.
நாளை அதாவது, 21-ம் தேதி காலை மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார். பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்திற்கு இன்று பிரதமர் மோடி வர உள்ளதால், 3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் தங்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, ராமநாதசுவாமி கோயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் அக்னி தீர்த்தம் கடல், தனுஷ்கோடி மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகள், பாம்பன் பாலம் போன்ற கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ள பொது இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.