ISRO Chief Somnath: ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்ட  அதே நாளில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 


இஸ்ரோ தலைவருக்கு புற்றுநோய்:


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவப்பட்ட நாளில் அவர் ஸ்கேன் செய்து பார்த்தபோது புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.


பின்னர், கீமோதெரபி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.  சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.


இந்த விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது.  இந்த நாளில் தான் இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்  இருப்பது கண்டறியப்பட்டது.  இதுகுறித்து அவர் பேசுகையில், "சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலின் போது சில உடல்நலப் பிரச்னைகள் எனக்கு இருந்தன . இருப்பினும், அந்த நேரத்தில் எனக்கு அது தெளிவாக தெரியவில்லை.


"புற்றுநோயில் இருந்து மீண்டேன்"


அதைப் பற்றிய தெளிவான புரிதலும் எனக்கு இல்லை. ஆதித்யா-எல் 1 விண்கலம் ஏவப்பட்ட அதே நாளில் தான் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.  எனது குடும்பத்தினருக்கு, ஊழியர்களுக்கும் இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 


ஐந்தாவது நாளில் இஸ்ரோவில் எனது பணியை தொடர்ந்தேன். இருப்பினும், நான் வழக்கமான பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டு இருக்கிறேன். கீமோதெரபி சிகிச்சைக்கு பின் தற்போது பூரண குணமடைந்துவிட்டேன்" என்றார் சோம்நாத். 


இஸ்ரோ தலைவராக பதவி வகித்த சிவன் ஓய்வு பெற்றபிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி இஸ்ரோவின் 10வது தலைவராக பொறுப்பேற்றார் சோம்நாத். கடந்த இரண்டு வருடமாக இஸ்ரோ தலைவராக பணியாற்றி வரும் சோம்நாத்தின் வழிகாட்டுதலின் கீழ், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.


அதே நேத்தில், சந்திரயான் 3 லேண்டர், ரோவரும் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மீது இஸ்ரோ தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 பேரை பிரதமர் மோடி கடந்த வாரம் அறிமுகம் செய்து வைத்தார்  என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


தமிழ்நாடை பின்பற்றும் தலைநகர் டெல்லி - கெஜ்ரிவால் அறிவித்த அதிரடி திட்டம்! குஷியில் பெண்கள்!