ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இத்தாலி சென்றார். நேற்று தொடங்கிய உச்சி மாநாடு 15ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், உச்சி மாநாட்டுக்கு நடுவே உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய பிரதமர் - உக்ரைன் அதிபர் சந்திப்பு: பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவு மூலம் உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என ஜெலன்ஸ்கிக்கு மோடி உத்தரவாதம் அளித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து பேசிய மோடி, "அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பை நடத்தினேன். உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது" என்றார்.
நடந்துகொண்டிருக்கும் போர் குறித்து பேசிய பிரதமர் மோடி, மனிதாபிமான அணுகுமுறையை இந்தியா நம்புகிறது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவே அமைதிக்கான வழி என இந்தியா நம்புவதாகவும் கூறினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிடுகையில், "இருதரப்பு உறவை இரு நாட்டு தலைவர்கள் ஆய்வு செய்து உக்ரைன் நிலைமை குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவு மூலம் போருக்கு அமைதியான தீர்வு காண இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்" என பதிவிட்டுள்ளார்.
மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, "ஜி7 உச்சி மாநாட்டிற்காக இத்தாலி பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்தேன். இருதரப்பு உறவுகளின் மேம்பாடு மற்றும் வர்த்தக விரிவாக்கம், குறிப்பாக கருங்கடல் ஏற்றுமதி வழித்தடத்தின் செயல்பாட்டின் பின்னணியில் நாங்கள் விவாதித்தோம். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் அனுபவத்தை பரிமாறிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்தோம்" என்றார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள்: உக்ரைன் அதிபரை சந்திப்பதற்கு முன், பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரான்ஸ் அதிபர் மேக்ரோனுடனான கலந்துரையாடலில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருந்தன