NASA: முதன்முதலாக, விண்வெளியில் இருந்து சுமார் 16 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பூமிக்கு லேசர் ஒளி வந்துள்ளது.


சைக் விண்கலம்:


அமெரிக்காவின் நாசா நிறுவனம் விண்வெளி குறித்த ஆயிவில் தற்போது மகத்தான சாதனையை படைத்துள்ளது.  நாசாவின் சைக் விண்கலத்தில் பயணித்த டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (DSOC)  என்ற கருவி மூலம் சாதனை படைத்துள்ளது நாசா. தொலைதூரத்தில் இருக்கும் சிறுகோள் குறித்து ஆய்வு செய்ய நாசா சைக் என்ற விண்கலத்தை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அனுப்பியுள்ளது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அக்டோபர் 13ஆம் தேதி சைக் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.


இந்த சைக் விண்கலம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள பாலோமர் ஆய்வகத்தில் உள்ள டெலஸ்கோப்புடன் தொடர்பு இணைப்பை ஏற்படுத்தியது.  அதாவது, விண்வெளியில் சைக் என்ற சிறுகோள் உள்ளது. இதனை ஆய்வு செய்யவதற்கு இந்த சைக் விண்கலம் அனுப்பப்பட்டது.  கிரகம் எப்படி உருவானது,  அதனின் நுண்ணறிவுகளை கண்டறிய இந்த சைக்  விண்கலம் பயன்படும். அந்த சைக் சிறுகோளை 2029ஆம் ஆண்டில் தான் இந்த விண்கலம் அடையும். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் வரை சோதனை மேற்கொள்ளும்.  பின்னர், சுற்றுப்பாதை மேற்கொள்ளும்  வழியில் பல்வேறு சோதனைகளையும் செய்ய உள்ளது.


சாதனை படைத்த நாசா:


இந்நிலையில், சைக் விண்கலத்தில் உள்ள டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் மூலம் லேசர்  கம்யூனிக்கேஷன் பெறப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 16 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேசர் ஒளி பூமிக்கு வந்தடைந்துள்ளது. 16 மில்லியன் கிலோ மீட்டர் என்பது பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 40 மடங்கு அதிகமாகும். கடந்த 14ஆம் தேதி இணைப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது லேசர் ஒளி பூமிக்கு வந்தடைந்துள்ளது. சைக் விண்கலத்தில் இருந்து புறப்பட்ட லேசர், பூமியை வந்தடைய சுமார் 50 விநாடிகள் எடுத்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர். இந்த லேசர் ஒளியை ஆய்வாளர்கள் 'முதல் ஒளி' (Frist Light) என்று அழைக்கின்றனர்.  இந்த லேசர் ஒளி மூலம் நீண்ட தூரத்திற்கு தகவல் தொடர்பை மேற்கொள்ள முடியும் என்பது தெரிகிறது.


பயன்பாடு என்ன?


தற்போது, விண்வெளி பயணங்களில் ரேடியோ சிக்னல்கள் மூலம் தகவல் தொடர்பு நடக்கிறது. ஆனால், ரேடியோ சிக்னல்களின் அலைவரிசை குறைவாக உள்ளது. அதற்கு பதிலாக, லேசர் லைட்களை பயன்படுத்தி தெளிவான தகவல் தொடர்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ரேடியோ சிக்னல்களுக்கு பதிலாக லேசர் ஒளியைப் பயன்படுத்தி பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையே தகவல்களை அனுப்ப பயன்படுத்தலாம் நாசா தெரிவித்துள்ளது. ரேடியோ சிக்னலை விட 10 முதல் 100 மடங்கு வேகமாக, இந்த லேச ஒளிகள் தகவல்களை வெளியிடும் திறன் கொண்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மற்றும் வெற்றிகரமாக முடிந்தால் தகவல் தொடர்புக்கு லேசர் ஒளியை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.