நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், பாஜக 230 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. எனினும் எதிர்பார்த்த வெற்றியை பாஜகவால் பெற முடியவில்லை. மத்திய அமைச்சர்கள்  எல். முருகன், அஜய் மிஸ்ரா தெனி, அர்ஜூன் முண்டா, ராஜீவ் சந்திரசேகர், வி. முரளிதரன், மகேந்திர நாத் பாண்டே, சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட பலர் இந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு தொகுதியைக் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை. 


தனிப் பெரும்பான்மை


தனிப் பெரும்பான்மையைப் பிடிக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்திய ஜனநாயகக் கூட்டணி 290 இடங்களைப் பிடித்துள்ளது. 


இதற்கிடையே மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூன் 5) காலை நடைபெற்ற நிலையில், ஜூன் 8ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. தனது கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 


இன்று மாலை 4 மணிக்கு பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். பாஜக தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.


3ஆவது முறையாகப் பிரதமர் ஆகும் 2ஆவது நபர்


மோடி பிரதமராகப் பதவியேற்றால், ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆகும் பெருமையைப் பெறுவார்.


இந்தியா கூட்டணி நிலை என்ன?


காங்கிரஸ் தனித்து 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 230 கூட்டணிகளில் வெற்றிவாகை சூடியது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரோடு இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகின்றனர். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்பட உள்ளது.