மாறி வரும் காலநிலையால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஐநா சபையின் காலநிலை உச்சி மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய மாநாடு வரும் டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய காலநிலை உச்சி நாநாடு: 


இதில், பல உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். உச்சி மாநாட்டில் இன்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "வரும் 2028ஆம் ஆண்டு, 33ஆவது காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்வந்துள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை 17 சதவீதம்.


ஆனால், உலகின் மொத்த கார்பன் வெளியேற்றத்தில் இந்தியா 4 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பங்கு வகித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையே பெரும் சமநிலையை ஏற்படுத்தும் வளர்ச்சியின் மாதிரியை இந்தியா உலகிற்கு வழங்கியுள்ளது.


2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு தீவிரத்தை 45 சதவிகிதம் குறைக்கவும், புதைபடிவமற்ற எரிபொருட்களின் பங்கை 50 சதவிகிதமாக அதிகரிக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த நூற்றாண்டின் தவறுகளைத் திருத்திக் கொள்ள நமக்கு அதிக நேரம் இல்லை. காலக்கெடுவை விட 11 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அதன் கார்பன் உமிழ்வு தீவிர இலக்குகளை அடைந்துள்ளது. தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்குகளை அடையும் பாதையில் இந்தியா உள்ளது" என்றார்.


பிரதமர் மோடி பேசியது என்ன?


உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றி பிரதமர் மோடி, "கூட்டு முயற்சிகளால், உலக நலனுக்காக, அனைவரின் நலன்களையும் பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. என்னால் எழுப்பப்பட்ட காலநிலை நீதி, காலநிலை நிதி மற்றும் பசுமைக் கடன் போன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறீர்கள்.


காலநிலை தணிப்புக்கும் தழுவலுக்கும் இடையேயான சமநிலையை பராமரிக்க வேண்டும். ஆற்றலை மாற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நியாயமாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட உதவும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்ற பணக்கார நாடுகள் முன்வர வேண்டும்" என்றார்.


கடந்தாண்டு, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மையை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையைக் குறிக்கும் இரண்டு திட்டங்களை இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.


சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை இயக்கத்தத்தின் இலக்கை பிரதிபலிக்கும் நோக்கில் பசுமை மானிய திட்டம் அறிவிக்கப்பட்டது. பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பில் வேரூன்றிய சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதேபோல, புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி நடவடிக்கை எடுத்து வரும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.