உத்தர பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். 19,000 ஆயிரம் கோடி மதிப்பிலான 37 வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அதுமட்டும் இன்றி, காசி தமிழ் சங்கத்தின் இரண்டாவது பதிப்பை முன்னிட்டு கன்னியாகுமரி, வாரணாசிக்கு இடையே ரயில்சேவை தொடங்கி வைக்க உள்ளார்.
கான்வாயை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு உதவிய பிரதமர் மோடி:
இந்த நிலையில், வாரணாசியில் பிரதமர் மோடி சாலை பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிரதமர் மோடியை பார்ப்பதற்காக சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது, பாதுகாப்பு கான்வாயில் பிரதமர் மோடி வரும்போது, அதற்கு பின்னே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது.
இச்சூழலில், சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு அருகே கான்வாய் நிறுத்தப்பட்டு, பின்னே வேகமாக வந்த ஆம்புலன்ஸ்க்கு வழிவிடப்பட்டது. கான்வாயில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தோங்கிய படியே, ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு நின்றனர். கான்வாயை நிறுத்தி ஆம்புலன்ஸ்க்கு பிரதமர் மோடி வழிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி, இம்மாதிரியாக செய்வது இது முதல்முறை அல்ல. கடந்தாண்டு, இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது, பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் மோடி, அவசர அவசரமாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
காங்ரா மாவட்டம் சம்பி கிராமத்தில் இச்சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக வெளியாகியுள்ள காணொளியில், சாலையில் வேகவாக கடந்து செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக, பிரதமர் மோடி, தனது வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு காத்திருப்பதும் வாகனம் கடந்து சென்ற பின்பு, சாலையில் செல்வதும் பதிவானது.
அதற்கு முன்னதாக, பிரதமர் மோடி குஜராத்தின் காந்திநகரிலிருந்து அகமதாபாத் சென்றிருந்தார். அப்போது, அந்த பாதையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றதால், மோடி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வாகனத்திற்கு வழி விட்ட சம்பவமும் அனைவரின் கவனத்தை ஈர்த்திருந்தது.
குஜராத் பாஜக ஊடக பிரிவு பகிர்ந்த வீடியோவில், அகமதாபாத் - காந்திநகர் சாலையில் பிரதமர் கான்வாயின் இரண்டு எஸ்யூவி வாகனகள் ஆம்புலன்ஸ் கடந்து செல்வதற்காக சாலையில் ஒதுங்கி சென்றதை காணலாம். ஆம்புலன்ஸ் கடந்து சென்றவுடன் அந்த சாலையில் பிரதமரின் வாகனங்கள் மீண்டும் பயணத்தை தொடங்கின.