Continues below advertisement

சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நாளை முதல் அமலாகின்றன. இதுவரை இருந்த 4 வகையான சதவீதத்திலான ஜிஎஸ்டி வரிகள் தற்போது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளன. இனி, 5 மற்றும் 18 சதவீதம் என இரண்டு ஜிஎஸ்டி வரிகள் மட்டுமே இருக்கும். இதனால், பல்வேறு பொருட்களின் விலைகளும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசினார். அவர் என்ன கூறினார் என்பதை தற்போது பார்க்கலாம்.

“புதிய ஜிஎஸ்டி-யால் மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி சேமிப்பு“

புதிய சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் நவராத்திரி முதல் நாளில் அமலுக்கு வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன என அறிவித்தார்.

Continues below advertisement

இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம், வியாபாரிகள், தொழில் செய்வோர் உள்ளிட்ட அனைவரும் பயனடைவர் என கூறிய பிதமர் மோடி, ஜிஎஸ்டி வரி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் என குறிப்பிட்டார். ஜிஎஸ்டி வரி குறைப்பால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று தெரிவித்த அவர்,  ஒட்டுமொத்த மக்களும் மொத்தமாக 2.5 லட்சம் கோடி அளவிற்கு சேமிக்க முடியும் என கூறினார்.

“நாட்டின் வளர்ச்சி வேகமடையும்“

தற்போது அமலாகும் ஜிஎஸ்டி வரி குறைப்பால், நாட்டின் வளர்ச்சி வேகமடையும் என குறிப்பிட்ட மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என தெரிவித்தார். பல்வேறு பெயர்களில் இருந்த மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டி-யால் தீர்ந்ததாக சுட்டிக்காட்டிய அவர், சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரிகளுக்கு முன், மாநிலங்களுக்கு இடையே சரக்குகளை கொண்டு செல்ல சிரமம் இருந்தது என கூறிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே வரி என்ற குறிக்கோளை ஜிஎஸ்டி சீர்திருத்தம் நிறைவேற்றும் என தெரிவித்தார். மேலும், நாட்டின் வரி விகிதங்களை குறைத்திருப்பது அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“சிறு கடைக்காரர்களுக்கு கூட மகிழ்ச்சி ஏற்படும்“

அதோடு, 25 கோடி பேரை ஏழ்மையில் இருந்து மீட்டு நடுத்தர மக்களாக மாற்றியுள்ளோம் என பெருமிதம் தெரிவித்த மோடி, வருமான வரியிலும், ஜிஎஸ்டி-யிலும் சலுகை அளித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இதனால், நடுத்தர மக்கள் இனி தங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது அமலாகும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், சிறு கடைக்காரர்கள் கூட பலனடைய முடியும் என தெரிவித்த மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் கார், ஸ்கூட்டர், பொருட்கள் வாங்குவது எளிதாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

“உள்நாட்டு தயாரிப்புகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்“

மேலும், இந்திய பொருளாதாரத்தின் புதிய அத்தியாயம் நாளை தொடங்குவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, பொருட்களை முடிந்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் எனவும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கே நாட்டு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்திய தயாரிப்பு பொருட்கள் உலகத் தரம்மிக்கதாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், உள்நாட்டு பொருட்களின் தரம் உலக அளவில் இந்தியாவை முன்னிலைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கனவையும் நினைவாக்க உழைத்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே, சுயசார்பு இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என தெரிவித்தார்.