சர்வதேச அளவில் ‘பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது’ என்ற கருப்பொருளில் கடந்த 2018ம் ஆண்டு முதல், அமைச்சர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு பாரீசிலும், 2019-ம் ஆண்டு மெல்போர்னிலும் நடைபெற்ற இரண்டு மாநாடுகளில், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், "பயங்கரவாதத்திற்கு பணம் கிடைக்கக் கூடாது" என்ற கருப்பொருளில், 3வது அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 75 நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டின் முதல் நாளில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அப்போது, பயங்கரவாத தாக்குதல்களுக்கான எதிர்வினையின் தீவிரம் அது எங்கு நடக்கிறது என்பதைப் பொறுத்து மாறுபடாது எனவும், அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும் சமமான எதிர்வினைக்கு தகுதியானவை என்றும் கூறினார். மனிதகுலம், சுதந்திரம் மற்றும் நாகரிகத்தின் மீதான தாக்குதல் தான் பயங்கரவாதம் எனவும், உலகளாவிய அச்சுறுத்தலைக் கையாள்வதில் தெளிவற்ற அணுகுமுறைக்கு இடமில்லை என்றும் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தின் மோசமான முகத்தை உலகம் தீவிரமாகக் கவனிக்கும் முன்பே இந்தியா கண்டுள்ளது என்றார். பல தசாப்தங்களாக பயங்கரவாதம் பல்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் இந்தியாவை காயப்படுத்த முயன்றுள்ளது. ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களை இந்தியா இழந்தாலும், பயங்கரவாதத்தை தைரியமாக எதிர்த்துப் போராடி வருகிறது என கூறினார். பயங்கரவாதத்தால் ஒரு உயிரை இழந்தாலும் அது எங்களுக்கு இழப்புதான் எனவும், பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கும் வரை ஓய மாட்டோம் என்றும் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கான தங்களின் ஆதரவை வெளியுறவுக்கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளதாக, மாநாட்டில் பங்கேற்காத பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை மறைமுகமாக சாடினார். அவ்வாறு அரசியல், கருத்தியல் மற்றும் நிதி ஆதரவை பயங்கரவாதிகளுக்கு வழங்கும் நாடுகள் மீது, அதற்கான விலையை சுமத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் மீதான பயங்கரவாதத்தின் தாக்கம் நீண்டகாலமாக கடுமையாக உள்ளது என்றார். தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகும் பகுதியை யாரும் விரும்புவதில்லை எனவும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்றும் கவலை தெரிவித்தார். மேலும், பயங்கரவாத நிதியுதவியின் வேரை நாம் தாக்கி அழிப்பது, வளர்ச்சிக்கு மிக முக்கியமானது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தொடர்ந்து, இன்றும், நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதற்கு எதிராக தொழில்நுட்பம், சட்டம், ஒழுங்குமுறை மற்றும் அனைத்து ஒத்துழைப்பு அம்சங்கள் பற்றியும் விவாதிக்கபட உள்ளன.
அமைதியை விரும்பும் நாடுகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், பயங்கரவாத நிதியுதவியை எதிர்கொள்வதில் உறுதியான ஒத்துழைப்புக்கான பாலத்தை உருவாக்கவும், இந்தியா அக்டோபரில் இரண்டு உலகளாவிய நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதன்படி, டெல்லியில் சர்வதேச காவல்துறையின் வருடாந்திர பொதுக்குழு மற்றும் ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டத்தை, இந்தியா தலைமையேற்று நடத்தியது நினைவுகூரத்தக்கது.