பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலான பேசியுள்ளார். அப்போது, ரஷ்யா உடனான போருக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். பிரதமரின் பதிவு குறித்த முழு விவரங்களை தற்போது காணலாம்.

பிரதமர் மோடியின் பதிவு என்ன.?

உக்ரைன் அதிபருடன் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசி,  சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

அதோடு, இந்த விஷயத்தில் சாத்தியமான பங்களிப்பை வழங்க  இந்தியா உறுதியா இருப்பதாகவும், உக்ரைன் உடனான இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல், கடந்த 8-ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, அவருடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தீவிர முயற்சி

இதனிடையே, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், இன்னும் ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லை.

ஆரம்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை குற்றம்சாட்டி வந்த ட்ரம்ப், அந்நாட்டுடன் கனிம ஒப்பந்தம் ஏற்பட்டபின், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தற்போது ரஷ்ய அதிபர் புதினையே அவர் குறை கூறி வருகிறார்.

இந்நிலையில், ட்ரம்ப் 2-வது முறையாக அதிபர் பதவி ஏற்றபினி, வரும் 15-ம் தேதி, புதினை முதன் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஏற்கனவே ரஷ்யாவிற்கு பல கெடுக்களை அவர் விதித்த நிலையில், புதின் அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டார்.

இந்த சூழலில், தற்போது இருவரும் நேரடியாக சந்தித்து பேசும் நிலையில், போருக்கு முடிவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.