பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இது தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.85 கோடியாக இருந்தது. இதுவே இந்த ஆண்டுக்கான அவருடைய சொத்த மதிப்பு ரூ.3.07 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 3 கோடியே 7 லட்சத்து 68 ஆயிரத்து 885 என்று துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


பிரதமர் மோடி தனது வருமானம் குறித்து தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில், வங்கி கையிருப்பாக ரூ.1.5 லட்சமாகவும், ரொக்கக் கையிருப்பாக ரூ.36,000மும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த வருமான ஏற்றம், பிரதமருக்கு உள்ள ஃபிக்ஸட் டெபாசிட் நிமித்தாக நடந்துள்ளதாகத் தெரிகிறது. பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரு.1.86 கோடி ஃபிகஸ்ட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ளார். அதன் நிமித்தமாக, கடந்த ஆண்டு இது 1.6 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் 31ல் முடிவடைந்த காலத்தில் இது அதிகரித்துள்ளது.


பிரதமர் மோடிக்கு பங்குச்சந்தையில் எந்த முதலீடும் இல்லை. அதேபோல் மியூச்சுவல் ஃபண்ட் வாயிலாகவும் எந்த வருமானமும் இல்லை. மாறாக அவர் நேஷனல் சேவிங்க்ஸ் சர்டிஃபிகேட்டில் National Savings Certificate Rs 8,93,251 முதலீடு செய்திருக்கிறார். ஆயுள் காப்பீடுகள் வாயிலாக ரூ. 1,50,957 லட்சம் முதலீடு செய்திருக்கிறார். 2012ல் எல்அண்ட்டி நிறுவனத்தில் பிரதமர் வாங்கிய ரூ.20,000 மதிப்பிலான பங்கும் சொத்து மதிப்பில் அடங்கும்.




தங்கம் எவ்வளவு இருக்கு?


பிரதமர் மோடியிடம் தங்க நகைகள் எவ்வளவு இருக்கின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவரிடம் ரூ.1.48 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் மட்டுமே உள்ளன. அவருடைய அசையும் சொத்து மதிப்பு ரூ.1.97 கோடி. பிரதமர் இதுவரை கடன் ஏதும் வாங்கவில்லை. அவரிடம் சொந்தமாக வாகனமும் இல்லை.


அசையா சொத்துகள் என்னென்ன?


பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலம் காந்திநகர் செக்டார் 1ல் சொந்த வீடு உள்ளது. அதன் முகவரி, நம்பர். 401/A, காந்திநகர் செக்டார்-1, குஜராத். ஆனாலும் இந்த சொத்துக்குக் கூட்டு உரிமையாளர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கும் தலா 25% பங்கு உள்ளது. இந்த சொத்து 3,531.45 sq ft சதுர அடியில் அமைந்துள்ளது. இந்த சொத்த மோடி கடந்த 2002ல் வாங்கினார். அப்போது அவர் குஜராத் முதல்வராகக் கூட ஆகவில்லை. அன்றைய தினம் அந்த சொத்தின் மதிப்பு ரூ.1.3 லட்சம். இப்போது அதன் மதிப்பு ரூ.1,10,00,000 என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு பிரதமரான பின்னர் மோடி எந்தவொரு புதிய சொத்தையும் வாங்கவில்லை எனப்து குறிப்பிடத்தக்கது.