புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. நாடாளுமன்றத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


புதிய நாடாளுமன்ற திறப்பு விழா:


திறப்பு விழாவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி இன்று கடுமையாக சாடினார். ஜப்பான், பப்புவா நியூ கினியா,  ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு இன்று தாய்நாடு திரும்பிய மோடி டெல்லி வந்தடைந்தார். 


சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன்னை பார்ப்பதற்காக 20,000க்கும் மேற்பட்டோர் குவிந்ததை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, "ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மாத்திரமன்றி, நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தமது தேசத்தின் நலனுக்காக நிகழ்ச்சியில் ஒன்றிணைந்தனர். அந்த விழாவில் முன்னாள் பிரதமரும் கலந்து கொண்டார். எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அனைவரும் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்" என்றார்.


எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்த பிரதமர்:


கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, கொரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. அதனை விமர்சித்து பேசிய மோடி, "நெருக்கடி காலங்களில், மோடி ஏன் உலகிற்கு தடுப்பூசிகளை கொடுக்கிறார்? என்று கேட்டார்கள். நினைவில் கொள்ளுங்கள், இது புத்தரின் பூமி, இது காந்தியின் பூமி! நம் எதிரிகள் மீதும் நாங்கள் அக்கறை கொள்கிறோம். இரக்கத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் நாங்கள்" என்றார்.


முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது. அதில், "குடியரசு தலைவர் முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு நமது ஜனநாயகத்தின் மீதான பாரதூரமான அவமானம் மட்டுமன்றி நேரடியான தாக்குதலும் ஆகும்.


நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு:


இந்த கண்ணியமற்ற செயல் குடியரசு தலைவர் உயர் பதவியை அவமதித்து, அரசியலமைப்பின் மதிப்பையும் மீறுகிறது. முதல் பெண் பழங்குடியின குடியரசு தலைவரை தேசம் கண்டுள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய மனநிலையை இது சீரழிக்கிறது.


நாடாளுமன்றத்தை இடையறாது குழிதோண்டிப் புதைத்த பிரதமருக்கு ஜனநாயக விரோதச் செயல்கள் புதிதல்ல. இந்திய மக்களின் பிரச்னைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு, முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்" என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முடிவு, ஜனநாயக நெறிமுறைகளின் மீதான தாக்குதல் என பாஜக விமர்சித்துள்ளது.