PM Modi In Rajya Sabha: நாடாளுமன்றததில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இது, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில், பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில், அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சரமாரி கேள்வி எழுப்பி வந்தனர். பிரதமர் மோடி இதற்கு நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று மக்களவையில் பேசிய மோடி எதிர்கட்சிகளை கடுமையாக சாடி பேசினார்.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நேரு குடும்பத்தை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பெயரை அவரது குடும்பத்தினர் ஏன் அவர்களின் பெயர்களின் பின்னால் வைத்து கொள்வதில்லை என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நேருவை எங்கேயாவது குறிப்பிடத் தவறினால், அவர்கள் (காங்கிரஸ்) வருத்தப்படுகிறார்கள். நேரு அவ்வளவு பெரிய மனிதர், பிறகு ஏன் அவர்கள் யாரும் நேரு குடும்பப்பெயரை பயன்படுத்துவதில்லை. நேரு பெயரை பயன்படுத்துவதில் என்ன அவமானம்? இந்த நாடு எந்த குடும்பத்திற்கும் சொந்தமானது அல்ல"
அதானி விவகாரம் குறித்து எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பேசிய பிரதமர், "நாங்கள் மாநிலங்களுக்கு பிரச்சனை என்று கூறுகிறார்கள்.
ஆனால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை 90 முறை கவிழ்த்துள்ளனர். ஒரு காங்கிரஸ் பிரதமர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்ய 356 ஐ ஐம்பது முறை பயன்படுத்தினார். அதுதான் இந்திரா காந்தி.
எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசினாலும் தாமரை (பாஜகவின் சின்னம்) மலரும். சில உறுப்பினர்களின் நடத்தை மற்றும் தொனி முழு நாட்டிற்கும் ஏமாற்றமளிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ, அவ்வளவு தாமரை மலரும். தாமரை மலர உதவிய எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவிப்போம்" என்றார்.
ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா என திமுக உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பிய மோடி, "கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் ஆட்சிகள் காங்கிரஸ் கட்சியால் கலைக்கப்பட்டன" என்றார்.