பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகளப்பு விதிமீறல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பஞ்சாப் அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. பிரதமர் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான தனது அறிக்கையை மூன்று நாட்களுக்குள் விரைந்து தனது  அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 


பஞ்சாப் முதல்வர்: முன்னதாக, பிரதமர் தனது பயணத்தை முடிக்காமல் திரும்பியதற்கு பஞ்சாப் முதல்வர்  சரண்ஜித் சிங் சன்னி வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், பாதுகாப்பு விதிமீறல் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். 


பதிண்டா விமான நிலையத்தில் இருந்து, பெரோசபூர் செல்வதற்கான பிரதமர் பயணத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மத்திய அரசு தான் மேற்கொண்டது. அவர், எங்களின் பிரதமர், இந்த நாட்டின் பிரதமர். பிரதமரின் பாதுகாப்புக்காக ரத்தம் கூட  சிந்தியிருப்பேன். எது நடந்திருந்தாலும்,அதுகுறித்து விசராணை நடத்தப்படும் என்று  உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.   




   


இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மெஹ்தாப் கில், உள்துறை மற்றும் நிதித்துறையின் முதன்மை செயலாளர் அனுராக் வர்மா ஆகியோர் கொண்ட இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 


உள்துறை அமைச்சகம்:  


ஆனால், அவசர கால திட்டத்தை கணக்கில்கொண்டு பஞ்சாப் அரசு சாலை வழியாக செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் தெரிவிக்கையில்,   


பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. மழை மற்றும் மிகவும் மங்கலான நிலை காரணமாக வானிலை சீரடைவதற்காக பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.




வானிலை சீரடையாதபோது சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு அவர் செல்வார் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக தேவைப்படும் பஞ்சாப் காவல்துறையின் தலைமை இயக்குநரிடமிருந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டபின் அவர் சாலை வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.


ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டறியப்பட்டது.


மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது.


பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின்படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும். மேலும் அவசர கால திட்டத்தை கணக்கில் கொண்டு பஞ்சாப் அரசு சாலை வழியாக செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.


இந்தப் பாதுகாப்பு குறைப்பாட்டுக்கு பின் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பவும் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.


இந்த கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  


இவ்வாறு, உள்துறை அமைச்சகம் பிரதமர் பாதுகாப்பு விதிமீறல் குறித்து தெரிவித்தது.