சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். டிடி தமிழ் என்ற பெயரில் புதுப் பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ள டிடி பொதிகை சேனலின் ஒளிபரப்பையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவரை, ஆளுநர் ரவி, மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


"தமிழர்களின் விரிந்தோம்பல் இதயங்களை கொள்ளைகொள்ளும்"


கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, "2024ஆம் ஆண்டுக்கு இந்த நிகழ்வு சிறப்பான தொடக்கத்தை தந்துள்ளது. அழகிய தமிழ் மொழி, கலாச்சாரம், உணவு ஆகியவை உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு தருகிறது. தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களை கொள்ளைகொள்ளும்.


கடந்த 1975ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பை தொடங்கிய சென்னை தூர்தர்ஷன் இன்று ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. ஹாக்கி பாஸ்கரன், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரால் இந்தியாவுக்கு பெருமை. 2018 முதல் 11 வகையான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக இருக்கிறேன். 


கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் லோகோவாக வீர மங்கை வேலு நாச்சியார் உருவம் வெளியிடப்பட்டிருப்பது எனது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கோலோ இந்தியா விளையாட்டு திட்டம் ஒடுக்கப்பட்ட, நலிவடைந்து இளைஞர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. உலக விளையாட்டு கட்டமைப்பின் மையமாக இந்தியா மாற வேண்டும் என்பதே அடுத்த இலக்கு" என்றார்.


இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளா?


தொடர்ந்து பேசிய அவர், "2014 ஆண்டுக்குப் பிறகு நமது விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆசிய விளையாட்டு மற்றும் பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சரித்திரம் படைத்தது. பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது. 


இது திடீரென்று நடந்ததல்ல. முன்னதாக, நாட்டின் வீரர்களிடையே கடின உழைப்புக்கும் ஆர்வத்திற்கும் பஞ்சம் இல்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், அவர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அடியிலும் அவர்களுக்கு அரசு துணை நின்றது. கடந்த 10 ஆண்டுகளில் அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளது. ஒட்டுமொத்த விளையாட்டு அமைப்பும் மாற்றப்பட்டது.


நமது நாட்டில் பெரிய கடற்கரைகள் இருக்கின்றன. பல கடற்கரைகள் அமைந்துள்ளன. ஆனால், இப்போது முதன்முறையாக, டையூவில் கடற்கரை விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், இந்தியாவில் கடற்கரை விளையாட்டு மற்றும் விளையாட்டு சுற்றுலாவின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நமது கடலோர நகரங்கள் அதன் மூலம் பலன் அடையப் போகின்றன. இந்தியாவில் 2036 ஒலிம்பிக் மற்றும் 2029 யூத் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.