உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.


கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 இந்து மத துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், இந்து மத தலைவர்களை தவிர, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


ராமர் சிலையின் முதல் புகைப்படம்:


அயோத்தி ராமர் கோயில் எப்படி இருக்கும் என்பது பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கோயிலின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.


அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் குழந்தை வடிவிலான ராம்லல்லாவின் சிலை கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிலையின் முதல் படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ராமர் கோயிலுக்கான இந்த ராம்லல்லா சிலையை கர்நாடகாவின் பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.


 






நேற்று கருவறையில் ஸ்ரீ ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு காசியில் இருந்து வந்திருந்த அர்ச்சகர்கள் முழு சடங்குகளுடன் சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் முடிந்ததும், கருவறையிலிருந்து குழந்தை வடிவமான ராம்லல்லாவின் முதல் படம் நேற்று இரவு வெளியானது.


பக்தி பரவசத்தில் பக்தர்கள்: 


ஷியாமல் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலை 150 கிலோ எடையுள்ளதாகவும், தரையில் இருந்து அளந்தால் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


புதன்கிழமை (ஜனவரி 18) விவேக் சிருஷ்டி அறக்கட்டளையிலிருந்து லாரியில் ராமர் கோயிலுக்கு ராம்லல்லா சிலை கொண்டுவரப்பட்டது. கோயில் வளாகத்திற்குள் சிலையை கொண்டு செல்ல கிரேன் உதவியுடன் எடுத்து வைக்கப்பட்டது. ராமர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) முதல் மங்களகரமான சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


நேற்று பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் நினைவு அஞ்சல் தலையையும், உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தையும் வெளியிட்டார்.