இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. இந்தியாவில் நவராத்திரி பண்டிகை  இந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது விஜயதசமியுடன் இன்று நிறைவடைகிறது. இந்த விழாக் கொண்டாடுவதற்கு பல்வேறு புராணக்கதைகள் கூறப்படுகிறது. 


குறிப்பாக, மகிஷன் என்னும் அசுரனை, பராசக்தி 9 நாட்களிலும் ஒவ்வொரு வடிவத்தில் வந்து கொன்றதாக இந்துக்கள் நம்புகின்றனர்.  அசுரனை கொன்ற துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களையும் நவராத்திரியின்போது மக்கள் வழிபடுகின்றனர். நவராத்திரியின் நிறைவு நாளாக விஜயதசமி அன்று தசரா பண்டிகை கொண்டாடப்படும்.


"சொந்த நிலத்தை பாதுகாக்கவே ஆயுதங்களை வழிபடுகிறோம்"


விஜயதசமியை முன்னிட்டு டெல்லியில் உள்ள டிடிஏ மைதானத்தில் துவாரகா ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "விஜயதசமி அன்று, 'சாஸ்திர பூஜை' கொண்டாடப்படுவது வழக்கம். இந்திய மண்ணில், ஆயுதங்கள் வழிபடப்படுவது எந்த நிலத்திலும் ஆதிக்கம் செலுத்துவதற்காக அல்ல, மாறாக தனது சொந்த நிலத்தை பாதுகாக்கவே வழிபடுகிறோம். நமது சக்தி பூஜை நமக்காக மட்டுமல்ல, உலகத்தின் நலனுக்காகவும் கூட" என்றார்.


சந்திரயான் 3 வெற்றி குறித்து பேசிய அவர், "சந்திரயான் 3 திட்டம் முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடு தசரா பண்டிகையைக் கொண்டாடுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். தீமைக்கு எதிராக நன்மையின் வெற்றியைக் குறிக்கும் திருவிழா. 


சந்திரனை வெற்றி பெற்று 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த முறை விஜயதசமியை கொண்டாடுகிறோம். கீதையின் அறிவை நாங்கள் அறிவோம். ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் தேஜாஸ் ஆகியவற்றை தயாரிக்கும் திறனும் உள்ளது. நாட்டு மக்களுக்கு ராமரின் கண்ணியம் தெரியும். தேசத்தின் எல்லையை எப்படி பாதுகாப்பது என்பதும் தெரியும்.


நவராத்திரி விழா:


இன்று பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படுவதைக் காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. அயோத்தியில் அடுத்த ராமநவமி அன்று, ராம்லாலா கோவிலில் எதிரொலிக்கும் ஒவ்வொரு குறிப்பும் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ராமர் கோயிலில் வாசம் செய்ய இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன" என்றார்.


நவராத்திரி விழா நாள்களில் ஒவ்வொரு நாள்களும் கோலங்கள், தானியங்கள் என ஒன்பது விதமாக சிறப்பு பூஜைகள் எல்லாம் நடத்தப்படும். வீடுகளில் கொலு வைத்து விதவிதமான பொம்மைகளால் அலங்கரித்து, வீட்டிற்கு வருபவர்களை நன்றாக உபசரித்து அனுப்புவர். நவராத்திரி முதல் மூன்று நாள்கள் லட்சுமிக்கும் அடுத்த மூன்று நாள்கள் சக்திக்கும் கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. 


ஒன்பதாம் நாள் நவமி திதியில் ஆயுதங்களுக்கு பூஜை செய்து, தசமி திதியில் அம்பாளின் வெற்றியை கொண்டாட சிறப்பு பூஜையுடன் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்த விளங்க சரஸ்வதியை வழிபடுவது வழக்கம். அம்மன் சரஸ்வதியாக அருள்பாளித்த நாள் கலைவாணிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. 


விஜய தசமி நாளில் நல்ல காரியங்கள் தொடங்குவது, குழந்தைகளுக்கு எழுத பழக்குவதி உள்ளிட்டவை முன்னெடுப்பது நன்மை தரும் என்று நம்பப்படுகிறது.