வெளிநாட்டு சுற்றப்பயணத்தின் ஓர் அங்கமாக பிரதமர் நரேந்திர மோடி, கரீபியன் நாடுகளுக்கு சென்றுள்ளார். கடந்த நவம்பர் 20ஆம் தேதி, ஜார்ஜ்டவுனில் உள்ள அரசு இல்லத்தில் கயானா அதிபர் டாக்டர் முகமது இர்பான் அலியை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வந்தபோது, அவரை அதிபர் அலி வரவேற்று மரியாதை அளித்தார்.
இலையில் சாப்பாடு:
இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து தூதுக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தன. பின்னர், அவருக்கு பாரம்பரிய சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 7 குழம்பு வகைகளுடன் இலையில் அவருக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது.
தனக்கு அளிக்கப்பட்ட விருந்து குறித்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, "அதிபர் இர்ஃபான் அலி தனது இல்லத்தில் 7 குழம்பு வகைகளுடன் உணவை வழங்கினார். அல்லி மலரின் இலையில் பரிமாறப்படும் இந்த உணவு கயானாவில் மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த உறவை எடுத்துக்காட்டுகிறது. அதிபர் இர்ஃபான் அலி மற்றும் கயானா மக்களின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
மெய் மறந்த பிரதமர் மோடி:
இதையடுத்து, ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்வமுள்ள பயணியாக கயானாவுக்கு பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த மோடி, இந்தியாவின் பிரதமராக பல நதிகள் ஓடிய பூமிக்கு தாம் திரும்பியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அன்றிலிருந்து இன்று வரை பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், கயானா மக்களின் அன்பும் பாசமும் அப்படியே உள்ளது என்று குறிப்பிட்டார். "நீங்கள் ஒரு இந்தியரை இந்தியாவிலிருந்து வெளியேற்றலாம், ஆனால் இந்தியாவை ஒரு இந்தியரிடமிருந்து வெளியே எடுக்க முடியாது" என்று கூறிய மோடி, தமது சுற்றுப்பயண அனுபவம் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.
முன்னதாக இந்திய வருகை நினைவிடத்தை தாம் பார்வையிட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தோ-கயானா மக்களின் மூதாதையர்களின் நீண்ட மற்றும் கடினமான பயணத்தை இந்த நினைவுச் சின்னம் உயிர்ப்பித்தது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்திருப்பதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அவர்கள் தங்களுடன் பன்முக கலாச்சாரம், மொழிகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும், காலப்போக்கில் கயானாவை தங்கள் வீடாக மாற்றிக் கொண்டதாகவும் கூறினார்.