PM Modi On Opposition: எதிர்க்கட்சிகள் விரக்தியில் நாடாளுமன்றத்தை சீர்குலைத்து வருவதாக, பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


பாஜக நாடாளுமன்றக் கூட்டம்:


நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள், இரு அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதோடு, மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த 92 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


இதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.


பிரதமர் மோடி ஆவேசம்:


கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை கடுமையாக கண்டித்து பேசினார். அதன்படி,சட்டசபை தேர்தல் தோல்வியால் திகைத்து நிற்கும் எதிர்க்கட்சிகள், விரக்தியில் நாடாளுமன்றத்தை சீர்குலைத்து வருகின்றன.  ஜனநாயகம் மற்றும் ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கூட்டாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலை கண்டித்திருக்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி அதை எப்படி வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ நியாயப்படுத்த முடியும்.


நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறலுக்கு ஆதரவாக சில கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இது மீறலைப் போலவே ஆபத்தானது. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிப்பதோடு, ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடத்தை 2024 மக்களவைத் தேர்தலில் அதன் எண்ணிக்கை குறைவதை உறுதி செய்யும், அடுத்ததேர்தலில் தற்போது இருக்கும் எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூட மக்களவைக்கு திரும்ப மாட்டார்கள்.’பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனது தலைமையிலான அரசாங்கத்தை தூக்கி எறிவதே எதிர்க்கட்சிகளின் இலக்கு,  ஆனால் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதே தனது அரசாங்கத்தின் இலக்கு எதிர்க்கட்சிகளின் நாடகங்களை கண்டு பாஜக உறுப்பினர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இங்கு வர கடுமையாக உழைத்ததால் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு இந்த பலம் அளித்துள்ளது. மக்கள் எங்களை ஆதரித்தனர். அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற அதிகாரங்களை அவமதிப்பதே எதிர்க்கட்சிகளின் செயல்திட்டம். இது வருத்தமளிக்கிறதுபிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


I.N.D.I.A.  கூட்டணி ஆலோசனைக் கூட்டம்:


எதிர்க்கட்சிகளின் நான்காவது ஆலோசனைக் கூட்டம்  டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலின், இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தொகுதிப் பங்கீடு, ஒருங்கிணைந்த பரப்புரை திட்டம், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து பாஜகவை எதிர்கொள்வதற்கான ஒருங்கிணைந்த வியூகத்தை மறுவடிவமைப்பது போன்ற பல்வேறு விவாகாரங்கள் தொடர்பாக தீர்க்கமாக விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.