சென்னை உட்பட 4 விமான நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என கொல்கத்தா விமான நிலையத்துக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட 4 விமான நிலையங்களுக்கு பல கட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


விமான நிலையங்களில் தீவிர சோதனை:


இதையடுத்து, விமான பயணிகள் உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல் உள்ளிட்டவைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால், சோதனை நேரமானது அதிகரிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பயணிகள் 3 மணி நேரத்துக்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


வெடிகுண்டு மிரட்டல் பின்னணி:


வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் தெரிவிப்பதாவது, கொல்கத்தா விமான நிலையத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வெடிகுண்டு  மிரட்டல் விடுத்தார். குறிப்பாக கொல்கத்தா சென்னை உள்ளிட்ட 4 விமான நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்துள்ளார். 


இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பானது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு வரக்கூடிய பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 


விமான நிலையங்களில், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் மற்றும் சோதனை கருவிகள் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, எந்த பொருளும் கண்டறியப்படவில்லை. 


தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும், மிரட்டல் உண்மையா பொய்யா என்பது குறித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.