இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது.


இந்திய - சீன எல்லை பிரச்னை:


சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய - சீன - பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் சீனா சாலைகளை அமைக்க இந்தியாவும் பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர். இதில், இருதரப்பில் பலி எண்ணிக்கை பதிவானது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அருணாச்சல விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.


இந்த நிலையில், இந்திய - சீன எல்லை பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவில் இயல்புநிலையை மீட்டெடுக்க இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் எல்லை பிரச்னையை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


"சீனாவுடனான உறவு முக்கியமானது"


நியூஸ்வீக் இதழுக்கு பிரதமர் மோடி அளித்த விரிவான பேட்டியில், "இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது. இருதரப்பு உறவுகளில் உள்ள அசாதாரண உறவை பின்னால் ஒதுக்கி வைத்துவிட்டு, நமது எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை நாம் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என நம்புகிறேன்.


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான, அமைதியான உறவு நமது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு பிராந்தியத்திற்கும் உலகிற்கும் முக்கியம். தூதரக, ராணுவ மட்டங்களில் நேர்மறையான, ஆக்கபூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம், நமது எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்.


அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் நாடுகள் அடங்கிய குவாட் கூட்டமைப்பு, சீனாவுக்கு எதிராக அமைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் பல கூட்டமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன.


நாங்கள் வெவ்வேறு கூட்டமைப்புகளில் வெவ்வேறு குழுக்களில் அங்கம் வகித்து வருகிறோம். குவாட் எந்த நாட்டுக்கு எதிராகவும் குறிவைக்கப்படவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு [SCO], BRICS மற்றும் பிற சர்வதேச குழுக்களைப் போலவே, குவாட் என்பதும் பகிரப்பட்ட நேர்மறையான திட்டத்தில் செயல்படும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் குழுவாகும்" என்றார்.