கடந்த 1998ஆம் ஆண்டு, அடல் பிகாரி வாஜ்பாய், பிரதமராக பொறுப்பு வகித்தபோது, பொக்ரான் அணுகுண்டு சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. இந்திய அறிவியல் வரலாற்றில் பொக்ரான் அணுகுண்டு சோதனை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
தேசிய தொழில்நுட்ப தினம்:
இந்த நாளை நினைவுகூரும் விதமாக தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பொக்ரான் அணுகுண்டு சோதனையை புகழ்ந்து பேசினார்.
"நாட்டிற்கான தொழில்நுட்பம் என்பது அதன் ஆதிக்கத்தைக் காட்டுவது அல்ல. மாறாக, அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு கருவியாகும். அதிகாரமளிப்பதற்கும் சமூக நீதியை உறுதி செய்வதற்கும் எனது அரசாங்கம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஜன்தன்-ஆதார்-மொபைல் திட்டமாக இருந்தாலும் சரி, CoWIN போர்டலாக இருந்தாலும் சரி, விவசாயிகளுக்கான டிஜிட்டல் சந்தையாக இருந்தாலும் சரி அரசாங்கம் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்கும் முகவராக பயன்படுத்தியுள்ளது. பிறந்தது முதல் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில தொழில்நுட்ப தீர்வுகள் உள்ளன.
"சமூக நீதியை உறுதி செய்ய அரசு தொழில்நுட்பம்"
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான அரசாங்கத்தின் உந்துதல் ஒரு பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு சுமார் 4,000 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இப்போது அது 30,000 க்கும் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது. முன்பு ஆண்டுக்கு 70,000 வர்த்தக முத்திரைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதே நேரத்தில் 2014 இல் 150 ஆக இருந்த இன்கியூபேஷன் மையங்களின் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது. தொழில்நுட்பத்தில் தலைவராக இருப்பதற்குத் தேவையான அனைத்து திசையிலும் நாடு நகர்கிறது. கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ஒரு உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அரசாங்கம் உழைத்துள்ளது" என்றார்.