பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.


பிரதமரின் முடிவுக்கு சர்வதேச அளவில் கிடைக்கும் பாராட்டு:


இலங்கை தலைநகர் கொழும்பில் இந்திய பண்பாட்டு உறவுகள் சபையால் நடத்தப்பட்ட 'பாலி மொழியை  செம்மொழியாக்கல்' என்ற குழு விவாதத்தில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் துறவிகளுக்கும் மோடி நன்றி தெரிவித்தார்.


எக்ஸ் தளத்தில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறயிருப்பதாவது, "பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க இந்திய அரசு முடிவு செய்திருப்பது பகவான் புத்தரின் சிந்தனைகளில் நம்பிக்கை கொண்டவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து உவகையடைந்தேன். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் பிக்குகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


முன்னதாக அபிதம்மா (புத்தரின் போதனைகள்) தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் மோடி, "தர்மத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான மொழியாக பாலி உள்ளது. ஒரு மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு முறை மட்டுமல்ல. அது ஒரு நாகரிகத்தின் ஆன்மா, அதன் கலாச்சாரம், அதன் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. பாலி மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அதன் மூலம் புத்தரின் போதனைகளை பாதுகாப்பதும் நமது பாெறுப்பு.


"இந்தியாவின் புத்த பாரம்பரியம்"


பாலி தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், மொழி, இலக்கியம், கலை மற்றும் ஆன்மீக மரபுகள் ஒரு தேசத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. அது அதன் அடையாளமாகும். இந்திய அரசு பாலியைப் பாதுகாத்து மேம்படுத்தும்" என்றார்.


தொடர்ந்து விரிவாக பேசிய பிரதமர், "இந்தியாவின் புத்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் 600 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பௌத்த பொருட்கள்.


பெளத்த மரபின் மறுமலர்ச்சியில், இந்தியா தனது அடையாளத்தை மீண்டும் கண்டுபிடித்து வருகிறது. மேலும் விரைவான வளர்ச்சி மற்றும் அதன் வளமான பாரம்பரியத்தை புதுப்பிப்பதில் ஈடுபட்டுள்ளது" என்றார்.