அரசு முறை பயணமாக 3 நாடுகளுக்குச் சென்ற பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


ஜப்பான் பயணம் 


ஜி-7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு கடந்த மே 19 ஆம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த மே 19 ஆம் தேதி ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருக்கு ஹிரோஷிமாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜி7 கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உலகம் எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றி பேசினார். 


பப்புவா நியூ கினிக்கு சென்ற பிரதமர்


ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு மே 22 ஆம் தேதி பிரதமர் மோடி பப்புவா நியூ கினிக்கு சென்றார். அங்கு தலைநகர் போர்ட் மோரெஸ்பியில்  நடைபெற்ற இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். பின்னர் பப்புவா நியூ கினி நாட்டின் தேசிய மொழியான தோக் பிசின் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்ட திருக்குறளை மோடி வெளியிட்டார். முன்னதாக பிரதமரை அழைக்க விமான நிலையம் சென்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். 


ஆஸ்திரேலியாவில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு


இதனையடுத்து 3 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மே 23 ஆம் தேதி பிரதமர் மோடி ஆஸ்திரேலியா சென்றார். அங்கு சிட்னி நகரில் 21 ஆயிரம் ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், பிரதமர் மோடியை "நீங்கள்தான் பாஸ்" என புகழ்ந்தார்.  தொடர்ந்து இருநாடுகளின் உறவு, திட்டங்களில் ஒத்துழைப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாட்டு பிரதமர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இதில் பல அறிவிப்புகள் வெளியானது. 


இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி 


இந்நிலையில் 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் கலந்து கொண்டார். தொடர்ந்து மக்களிடையே பேசிய ஜே.பி.நட்டா, 'பிர்தமர் மோடியின் ஆட்சி முறையை உலகமே பாராட்டுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உங்களிடம் ஆட்டோகிராப் கேட்டார். இந்நிகழ்வு உங்கள் தலைமையிலான இந்தியாவை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை காட்டுகிறது.  மேலும் பப்புவா நியூ கினியாவின் பிரதமர் உங்கள் கால்களைத் தொட்ட விதம், அங்கு உங்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பதை காட்டுகிறது. பிரதமருக்கு இப்படி வரவேற்பு அளிக்கப்படுவதைக் கண்டு இந்திய மக்கள் பெருமை கொள்கிறார்கள்" என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், “பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராப் , தனக்கு பிரதமர் மோடி 'விஷ்வ குரு' என்று கூறினார். ஆஸ்திரேலிய பிரதமர் பிரதமர் மோடியை 'தி பாஸ்' என்று அழைத்தார். இத்தகைய சம்பவங்கள் இன்று உலகம் பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியாவை பார்க்கிறது’ என்பதை காட்டுகிறது. 


இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, “ நான் நமது நாட்டின் கலாசாரம் பற்றி பேசும்போது, ​​உலகத்தின் கண்களை பார்க்கிறேன். இது இந்தியாவில் நாங்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க நீங்கள் கொடுத்த நம்பிக்கையால் வந்தது. இங்கு வந்துள்ளவர்கள் இந்தியாவை நேசிப்பவர்கள், பிரதமர் மோடியை அல்ல. மேலும் தமிழ் மொழி நமது மொழி. அது ஒவ்வொரு இந்தியனின் மொழி. உலகின் பழமையான மொழி. பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' புத்தகத்தின் டோக் பிசின் மொழிபெயர்ப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  


அதேசமயம் நான் ஏன் உலகிற்கு தடுப்பூசிகளை கொடுத்தேன் என்று அங்குள்ளவர்கள் என்னிடம் கேட்டார்கள். இது புத்தர், காந்தியின் தேசம் என்று சொல்ல விரும்புகிறேன். நமது எதிரிகள் மீதும் நாங்கள் அக்கறை கொள்கிறோம். இந்தியா என்ன நினைக்கிறது என்பதை இன்று உலகம் அறிய விரும்புகிறது. இந்தியாவின் கலாசாரம் மற்றும் மகத்தான பாரம்பரியம் பற்றி பேசும் போது, ​​அடிமை மனப்பான்மையில் மூழ்கி விடாதீர்கள், தைரியமாக பேசுங்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அதனை உலகம் கேட்க ஆவலாக உள்ளது. எங்களின் புனிதத் தலங்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்று நான் கூறும்போது உலகம் என்னை ஏற்றுக்கொள்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.