பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சகோதரி கமர் மொஹ்சின் ஷேக், ரக்ஷா பந்தனை முன்னிட்டு அவருக்கு ராக்கியை அனுப்பியுள்ளார். மேலும் அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தனை செய்தும், 2024 பொதுத் தேர்தலுக்கு வாழ்த்தும் தெரிவித்தும் கடிதம் எழுதியுள்ளார். ராக்கியை முன்னிட்டு தாம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், இந்த முறை மோடியை சந்திக்க எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகவும் கமர் கூறினார்.
"இந்த முறை அவர் என்னை டெல்லிக்கு அழைப்பார் என்று நம்புகிறேன். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். எம்பிராய்டரி டிசைனுடன் கூடிய ரேஷ்மி ரிப்பனைப் பயன்படுத்தி நானே இந்த ராக்கியை உருவாக்கினேன்" என்று செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு கமர் மொஹ்சின் ஷேக் கூறியுள்ளார்.
"அவர் மீண்டும் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் இதற்கு தகுதியானவர், ஏனென்றால் அவருக்கு அந்த திறன்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு முறையும் அவர் இந்தியாவின் பிரதமராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
கமர் ஷேக் ஒவ்வொரு ஆண்டும் மோடிக்கு ராக்கி மற்றும் ரக்ஷா பந்தன் அட்டையை அனுப்பி வருகிறார்.
கமர் ஷேக் திருமணத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவில் வசித்து வருகிறார். 24-25 ஆண்டுகளுக்கும் மேலாக மோடிக்கு ராக்கி கட்டி வருவதாக பாகிஸ்தான் வம்சாவளி பெண் கூறினார்.
மோடியுடனான தனது நினைவுகளை அசைபோட்ட ஷேக், மோடியுடன் முதல் ரக்ஷா பந்தன் கொண்டாடியது அவர் ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்தபோதுதான் என்று கூறினார்.
ரக்ஷா பந்தன் இந்துக்களின் நாட்காட்டி மாதமான ஷ்ரவணாவின் கடைசி நாளில் அனுசரிக்கப்படுகிறது, இது வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது.இந்த நாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்கிறார்கள்.
இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் தேதி குறித்து பெரும் குழப்பம் நிலவுகிறது. ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 11, வியாழன் அன்று வரும் என்று சிலர் நம்புகிறார்கள், மற்றவர்கள் ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என்று கூறுகின்றனர்.த்ரிக் பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, ராக்கி கட்டுவதற்கும், ரக்ஷா பந்தனில் சடங்குகளைச் செய்வதற்கும் சிறந்த நேரம் அபராஹ்னா ஆகும் என்கின்றனர்.பத்ராவின் போது ரக்ஷா பந்தன் சடங்குகள் செய்யக்கூடாது, ஏனெனில் இது தீங்கிழைக்கும் நேரம் என்று இந்து மத நூல்கள் நம்புகின்றன, இது அனைத்து மங்களகரமான வேலைகளுக்கும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்கும் முன் பத்ரா முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் என சிலர் நம்புகின்றனர்.