தனது முதலமைச்சர் பதவியை காப்பற்றிக் கொள்வதிலேயே, அசோக் கெலாட் அதிக தீவிரம் காட்டியதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.


ராஜஸ்தான் தேர்தல் களம்:


அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும், 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநித்தில் ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஆளுங்கட்சியான காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான பாஜக ஏற்கனவே, அங்கு தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இதனால், மாநிலத்தில் தேர்தல் பரப்புரைகள் மற்றும் தலைவர்களின் சரமாரி குற்றச்சாட்டுகளால் மாநிலத்தில் தேர்தல் பணிகள் களைகட்ட தொடங்கியுள்ளன. இந்நிலையில் தான் பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலம், சிட்டோர்கார் பகுதியில் நடைபெற்ற பாஜக பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.


காங்கிரசை கடுமையாக சாடிய பிரதமர் மோடி:


நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழித்துவிட்டது. குற்றப் பட்டியலில் மாநிலம் முதலிடத்தில் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் நடைபெறுகிறது. இதற்காகவா காங்கிரசுக்கு வாக்களித்தீர்கள்? மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வந்து மாநிலத்தை காப்பாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில், தொடர்புடைய மாஃபியா கும்பல் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படும். 


பதவியை காப்பாற்ற தீவிரம்:


ராஜஸ்தான் மக்களை ஏமாற்றி காங்கிரஸ் வெற்றிகரமாக ஆட்சி அமைத்தது. ஆனால், ஆட்சியை முறையாக நடத்த தவறிவிட்டார்கள். அசோக் கெலாட் தனது முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். அவரை பதவி நீக்கம் செய்ய சக தலைவர்கள் தீவிரமாக முயன்றனர். ஒருவேளை ராஜஸ்தானில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தன்னால் முன்னெடுக்கப்பட்ட, நலத்திட்டங்களை நிறுத்த வேண்டாம் என அசோக் கெலாட் பேசியிருப்பதன் மூலம் காங்கிரஸின் தோல்வியை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், காங்கிரஸை வீட்டிற்கு அனுப்புவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது” என கடுமையாக சாடினார்.


 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி: 


முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.7000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தனது அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. ராஜஸ்தானில் கடந்த காலத்தின் பாரம்பரியம், நிகழ்காலத்தின் வலிமை மற்றும் எதிர்காலத்தின் சாத்தியக்கூறுகள் ஆகிய 'திரிசக்தி' உள்ளது. ராஜஸ்தானின் இந்த 'திரிசக்தி' நாட்டின் பலத்தை அதிகரிக்கிறது” என பிரதமர் மோடி பேசினார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் தங்களது ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட, பல்வேறு நலத்திட்டங்களை முன்வைத்து தீவிர பரப்புரையை தொடங்கியுள்ளது.