PM Modi Tweet: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி பகிர்ந்த செல்ஃபியை, பிரதமர் மோடி ரீ-போஸ்ட் செய்துள்ளார்.
செல்ஃபியை பகிர்ந்த மோடி:
துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி கலந்துகொண்டு நேற்று உரையாற்றினார். அப்போது, சர்வதேச தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசினார். அந்த வகையில், இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சந்தித்தபோது செல்பி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை ”cop28 மாநாட்டில் நல்ல நண்பர்கள்” என குறிப்பிட்டு ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தை பிரதமர் மோடி தற்போது ரீ போஸ்ட் செய்து, “நண்பர்களை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கிறது” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கத்தார் எமிர் உடன் சந்திப்பு:
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ”துபாயில் நேற்று நடந்த COP28 உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக கத்தாரின் எமிர் ஆன ஹெச்.எச்.ஷேக்கை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, இருதரப்பு கூட்டுறவின் சாத்தியம் மற்றும் கத்தாரில் உள்ள இந்திய சமூகத்தின் நல்வாழ்வு குறித்து நாங்கள் ஒரு நல்ல உரையாடலை நடத்தினோம்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, கத்தார் எமிர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மோடி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி பேச்சு:
முன்னதாக நேற்று காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் நேற்று பேசிய பிரதமர் மோடி “உலகளாவிய உமிழ்வைக் கடுமையாகக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இன்று, உலகத்தின் முன் சூழலியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான சமநிலையின் ஒரு சிறந்த உதாரணத்தை இந்தியா முன்வைத்துள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை உலக மக்கள்தொகையில் 17 சதவிகிதம், ஆனால் உலகளாவிய கார்பன் உமிழ்வில் இந்தியா 4 சதவிகிதம் மட்டுமே பங்களிக்கிறது. தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பின் (NDC) இலக்குகளை அடைவதில் நாங்கள் வேகமாக முன்னேறி வருகிறோம். உண்மையில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் புதைபடிவமற்ற எரிபொருள் இலக்குகளை அடைந்துவிட்டோம். NDC இலக்குகளை அடையும் பாதையில் இருக்கும் உலகின் சில பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று” என குறிப்பிட்டுள்ளார்.