விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடி நிதி விடுவிப்பு.. பிரதமர்-கிசான் திட்டத்தின் 10வது தவணை!
பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ 20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 10.09 கோடிக்கும் அதிகமான (100 மில்லியன்) விவசாயிகளுக்கு 10வது தவணை நிதி உதவியாக ரூ. 20,900 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதிப் பலன் வழங்கப்படும் என்றும், ரூ.2,000 என மூன்று தவணைகளில் இந்த பணம் நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சுமார் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ 14 கோடிக்கும் அதிகமான ஈக்விட்டி மானியத்தையும் பிரதமர் வெளியிட்டார். இதன் மூலம் 1.24 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது ஒன்பது முதல்வர்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து பல அமைச்சர்கள் மற்றும் விவசாய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவிக்கையில், 2022 புத்தாண்டின் முதல் நாளில், சுமார் 10.09 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ 20,900 கோடி மாற்றப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உதவும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர்-கிசான் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 9வது தவணை கடந்த ஆகஸ்ட் மாதம் 2021ல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்