2022 ஜனவரி மாதம் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறையை வாரி இறைக்கும் மாதமாக அமைந்துள்ளது.இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வங்கி வேலைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 


வங்கி விடுமுறைப் பட்டியல்: 


1 ஜனவரி : புதுவருடம்
3 ஜனவரி : புதுவருடக் கொண்டாட்டம்/ சிக்கிம் லோசாங்
4 ஜனவரி : மிசோரம் லோசாங்
11 ஜனவரி :மிஷனரி தினம்
12 ஜனவரி : சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்
14 ஜனவரி : மகர் சங்கராந்தி (பல்வேறு மாநிலங்கள்)
15 ஜனவரி: பொங்கல்(தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா)
18 ஜனவரி: தை பூசம் 
26 ஜனவரி : குடியரசு தினம்
31 ஜனவரி : மே தாம் மே பே - அசாம்


வார விடுமுறை நாட்கள்: 


2 ஜனவரி : ஞாயிறு
8 ஜனவரி : இரண்டாவது சனிக்கிழமை
9 ஜனவரி : ஞாயிறு
16 ஜனவரி : ஞாயிறு
22 ஜனவரி : நான்காவது சனிக்கிழமை
23 ஜனவரி : ஞாயிறு
30 ஜனவரி : ஞாயிறு


இந்த விடுமுறையை வைத்து வங்கி ஊழியர்கள் தங்களது விடுமுறை தினத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம். 


முன்னதாக, அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்மை பயன்படுத்தி மாதம் ஐந்து முறையும், பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மாதத்திற்கு மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்தல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை செய்யலாம்.


அதற்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட இலவச பரிமாற்றத்திற்கு பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இதுவரை 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்தது. வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் வாடிக்கையாளர்கள் பலர் கோரிக்கை வைத்து வந்தனர்.


இந்நிலையில்தான் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, இதுவரை 20 ரூபாயாக பிடிக்கப்பட்டிருந்த கட்டணமானது இன்றிலிருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் ஏடிஎம் பராமரிப்பு, பாதுகாப்பு செலவினங்களுக்காக நிதி தேவை அதிகரித்துள்ளது.எனவே அதை கருத்தில் கொண்டு இந்தக் கட்டணமானது அதிகரிக்கப்படுவதாகவும், இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தன்று ரிசர்வ வங்கி இவ்வாறு அறிவித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.