இந்திய திரையுலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராஜமெளலி. இவர் இயக்கிய பாகுபலி படம் உலகளவில் இவரை திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்கிய ஆர்.ஆர். ஆர். படம் இந்தியா படமாக வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.


இந்திய சுதந்திர காலகட்டத்தில் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து நடித்தனர். ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நாட்டு நாட்டு என்ற பாடல் ஆடியிருப்பார்கள். இந்த பாடல் திரையரங்கில் பார்த்த ரசிகர்களுக்கே விருந்தாக அமைந்தது.


ஆஸ்கார் பரிந்துரை:


சிறந்த நடன அசைவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடல், புகழ்பெற்ற ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் பல கட்ட போட்டிகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கான பரிந்துரையில் நாட்டு நாட்டு பாடல் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. 


இதற்கு மத்தியில், விரைவில் நடைபெற உள்ள 95வது ஆஸ்கார் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுகளுக்கான இறுதிப்பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் பரிந்துரைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக வெளியான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட தூதர்:


இந்நிலையில், நாட்டு நாட்டு பாடலுக்கு தென் கொரியா தூதர் சாங் ஜே போக்குடன் தூதரக ஊழியர்கள் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்தியாவில் உள்ள தென் கொரியா தூதரகத்தில் தூதரும் தூதரக ஊழியர்கள் ஆடும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.


தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், "கொரிய தூதரகத்தின் ஊழியர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடியதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தென் கொரியா தூதர் சாங் ஜே போக், தூதரக ஊழியர்களுடன் ஆடுவதை பாருங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதை பாராட்டி ட்விட்டரில் பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, "உற்சாகமான, அபிமானமான குழு முயற்சி இது" என குறிப்பிட்டுள்ளார்.


 






நட்சத்திர பட்டாளம்:


95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 13-ந் தேதி நடைபெற உள்ளது. ஏற்கனவே நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் அலியாபட், சமுத்திரக்கனி, அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வெளிநாட்டு கலைஞர்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.