பிரான்சின் தேசிய தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற பிரதமர் மோடி, இரவு விருந்தில் கையில் மது அருந்தாமல் மது கிளாஸை கீழே வைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 


இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். அதனடிப்படையில் இரண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். பின்னர், அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். 


அதில், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கி கவுரவித்தார். இதற்கு முன்னதாக பிரான்சின் உயரிய விருது தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்து அரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு வழங்கப்பட்டது. அந்த வரிசையில் பிரதமர் மோடியும் இணைந்துள்ளார். 


நிகழ்ச்சியின்போது பிரான்ஸ் அதிபரும், அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும் எலிசி அரண்மனையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளித்தனர். அப்போது, உணவுக்கு பிறகு விருந்தில் இருந்த அனைவரும் ஒன்றாக எழுந்து கையில் மது கிளாஸ் எடுத்து வாழ்த்து கூறி குடித்தனர். அப்போது மரியாதை நிமித்தமாக கையில் மது கிளாஸை எடுத்த பிரதமர் மோடி, அதை குடிக்காமல் மீண்டும் கீழே வைத்து விட்டார்.  பிரதமர் மோடி மதுவை குடிக்காமல் தவிர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






ஒருசிலர் பிரதமர் மோடி மது அருந்தாததை, அவர் டீ டோட்லர் என கூறி விமர்சித்து வருகின்றனர். நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரான்ஸ் பயணம் குறித்து பேசிய பிரதமர் மோடி,  பிரான்சின் இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், எப்போதும் இல்லாத அளவுக்கு இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரான்சில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய முன் வரவேண்டும் என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களும் பங்கெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.