நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
மோடி செய்தியாளர் சந்திப்பு:
அப்போது பேசிய அவர், “சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுகள். நாட்டில் உற்சாகமான சூழல் நிலவுகிறது. இந்தியாவின் மூவர்ணக் கொடி தற்போது நிலவிலும் பறக்கிறது. அது பெருமையை தருவதோடு சிவசக்தி முனை உத்வேகத்தின் புதிய மையமாக மாறியுள்ளது, இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது. நமது திறமை உலகின் முன்பு வெளிப்பட்டு இருப்பதால், இந்தியாவிற்கு பல்வேறு வாய்ப்புகள் இந்தியாவை நோக்கி வரும். தெற்கு நாடுகளின் குரலை பிரதிபலிப்பதிலும், ஜி20யில் ஆப்பிரிக்க யூனியன் நிரந்தர உறுப்பினராகிவிட்டதற்காகவும் இந்தியா எப்போதும் பெருமைப்படும். இவை அனைத்தும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான சமிக்ஞையாகும். 'யஷோபூமி' என்ற சர்வதேச மாநாட்டு மையமும் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் பாராட்டுகள்.
இந்த கூட்டத்தொடர் மிக குறுகியட்து ஆனால் காலத்தின் அடிப்படையில் மிகப்பெரியது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் இந்த கூட்டத்தொடரில் எடுக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டு கால பயணம், புதிய இலக்கு. இப்போது புதிய இடத்திலிருந்து பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் போது, 2047க்குள் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக வரும் காலத்திற்கான அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்படும். இது ஒரு குறுகிய அமர்வு. உற்சாகம் மற்றும் உற்சாகமான சூழலில் எம்.பி.க்கள் தங்களது அதிகபட்ச நேரத்தை அமர்வுக்கு ஒதுக்க வேண்டும். ஒருவரது வாழ்க்கையில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நிரப்பும் தருணங்கள் சில இருக்கும். இந்த குறுகிய அமர்வை நான் அப்படி தான் பார்க்கிறேன். விநாயக சதுர்த்தி அன்று புதிய நாடாளுமன்றம் செயல்பட தொடங்க உள்ளது. விநாயகப் பெருமானுக்கு 'விக்னஹர்தா' என்ற பெயரும் உண்டு, இனி நாட்டின் வளர்ச்சியில் எந்த தடையும் இருக்காது” என பிரதமர் மோடி பேசினார்.