காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நரசிம்ம ராவின் 102ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1921ஆம் ஆண்டு பிறந்த இவர், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.
நரசிம்ம ராவின் 102ஆவது பிறந்தநாள்:
நரசிம்ம ராவ், பிரதமராக பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றின. அப்போது, தொழில் முனைவோர், வணிகம் செய்வதில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. அம்மாதிரியான கட்டுப்பாடுகளை ரத்து செய்து நரசிம்ம ராவ் மேற்கொண்ட நடவடிக்கைகள், பின்னாட்களில் நாடு வளர்ச்சி அடைய காரணமாக அமைந்தன.
இந்நிலையில், நரசிம்ம ராவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "பிவி நரசிம்ம ராவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது தொலைநோக்கு தலைமையும் அர்ப்பணிப்பும் குறிப்பிடத்தக்கது. நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை புகழ்ந்து பேசுவது பாஜகவுக்கு இது முதல்முறை அல்ல. பாஜக தலைவர்கள், நேரு குடும்பத்தை தவிர்த்து, மற்ற காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்து பேசுவது தொடர் கதையாகி வருகிறது. சுதந்திர போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் படோல் தொடங்கி நரசிம்ம ராவ் வரையில், இந்த பட்டியல் நீண்டு செல்கிறது.
காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்து தள்ளும் பிரதமர் மோடி:
நரசிம்ம ராவ் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்ட காங்கிரஸ், "இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் பிறந்தநாளில், அவரை நினைவு கூர்கிறோம். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாராளமய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியாவை புதுப்பிக்க செய்த புகழ்பெற்ற அரசியல் தலைவர் ராவுக்கு நாங்கள் பணிவான அஞ்சலி செலுத்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.
"இந்தியாவின் பொருளாதார மாற்றத்திற்கான அவரது பங்களிப்பு எப்போதும் போற்றப்படும்" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.